பக்கம் எண் :

586சித்தர் பாடல்கள்

மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி
     மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில்
கீலத்தின் கீழ்நெல்லிச் சாற்றைக் காய்ச்சிக்
     கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கிச்
சாலத்தான் நீர்மேலே நெருப்பைப் போட்டே
     சாரத்தான் மலைதாங்கிக் குள்ளே யோட்டி
ஆலத்தா னமுதைத்தான் விழுதை நாட்டி
     ஆறத்தா னமரத்தா னனைத்து மாமே.
24
  
வெப்பெல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய்
     வினையெல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும்
     அவற்றின்மே லாடுகின்றா ளன்னை யன்னை
துப்பெல்லாம் துரிசெல்லாம் சுத்தி சுத்தி
     சொக்குமடா கைலாசச் சொர்க்க லிங்கம்
கப்பெல்லாம் நீங்குமடா காம தேனு
     கறக்குமடா காயத்ரிக் கனிவாம் க்ஷீரம்.
25
  
திருவான சேறையடா பஞ்ச சாரம்
     திகழ்தெய் வமுஞ் சாரம் தேவிசாரம்
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம்
     உற்றதொரு புஷ்கரணி யதுவும் சாரம்
கருவான மானமதுவும் சாரம் சாரம்
     கண்ணான சாரமதைக் கண்டேன் கண்டேன்
குருவான பலசாரக் கோப்பும் கண்டேன்
     கோக்கனக மாஞ்சாரக் கொதிப்புங் கண்டேன்.
26
  
சாரைக்கோட் டைக்குள்ளே சாரம் சாரம்
     சார்ந்தநவி சாரக்கற் பூரம் பூரம்
கூரைக்கோட் டைக்குள்ளே கோரம் கோரம்
     கொள்ளாமற் சிவயோனிக் குள்ளாம் வீரம்
வீரைக்கோட் டைக்குள்ளே விந்துப் பூவை
     வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்
காரைக்கோட் டைக்குள்ளே வந்த சித்தன்
     கரையாட யண்டாண்டம் பூண்ட பத்தன்.
27