பக்கம் எண் :

82சித்தர் பாடல்கள்

கருவிலே விழுந்தெழுந்த கன்மவாதனை யெலாம்
பருதிமுன் இருளதாயப் பறியும் அங்கி பாருமே.
455
  
பாரும்எந்தை ஈசர்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்டது இல்லையே.
456
  
கண்டிலாது அயன்மாலென்று காட்சியாகச் சொல்கிறீர்
மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பக்திவந்து முற்றுமே.
457
  
முற்றுமே அவனொழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றுநிற்க வல்லது
கற்றதாலே ஈசர்பாதம் காணலா யிருக்குமோ
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.
458
  
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலத்துளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.
459
  
எழுப்பிமூல நாடியை இதப்படுத்த லாகுமே
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லிரேல்
கழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில்அப்புறம்
அழுத்திஓ ரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே.
460
  
அல்லதில்லை யென்று தானாவியும் பொருளுடல்
நல்லஈசர் தாளிணைக்கும் நாதனுக்கும் ஈந்திலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.
461
  
ஆனதே பதியது அற்றதே பசுபாசம்
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.
462