பக்கம் எண் :

86சித்தர் பாடல்கள்

ஞாலவட்ட மன்றுளே நவின்றஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.
485
  
என்னகத்தில் என்னை நானெங்கும் ஓடிநாடினேன்
என்னகத்தில் என்னையன்றி ஏதுமொன்று கண்டிலேன்
வின்னெழும்பி விண்ணகத்தின் மின்னொடுங்கு மாறுபோல்
என்னகத்துள் ஈசனோ டியானுமல்ல தில்லையே.
486
  
நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ
நாலுசாமம் ஆகியும் நவின்றஞான போதமாய்
ஆலமுண்ட கண்டனும் அயனும் அந்தமாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததேசி வாயமே.
487
  
முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே.
488
  
மூலமண்ட லத்துளே முச்சதுர மாயமாய்
நாலுவாசல் என்விரலில் உடுத்தித்த மந்திரம்
கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றநீ
மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே.
489
  
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கஞானம் எவ்விடம்
அடங்குகின்றது எவ்விட மறிந்து பூசை செய்யுமே.
490
  
புத்தகங்க ளைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென்றே அறிகிலீர்
அத்தனைய சித்தனை அறிந்துநோக்க வல்லிரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும் போக மாகுமே.
491
  
அருளிலே பிறந்துதித்து மானயரூப மாகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லிரேல்
மருள தேதுவன்னியின் மறைந்ததே சிவாயமே.
492