நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே போடுதர்ப்ப பூசையென்ன பூசையென்ன பூசையே. | 500 |
| |
என்னைஅற்ப நேரமும் மறக்கிலாத நாதனே ஏகனே இறைவனே இராசராச ராசனே உன்னையற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமோ உனதுநாட்டம் எனதுநாவி லுதவி செய்வீரீசனே. | 501 |
| |
எல்லையற்று நின்ற சோதி ஏகமாய் எரிக்கவே வல்லபூர ணப்பிரகாசர் ஏகபோக மாகியே நல்லவின்ப மோனசாகரத்திலே அழுத்தியே நாடொணாத அமிர்தமுண்டு நானழிந்து நின்றநாள். | 503 |
| |
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லிரே ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம் வானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே. | 504 |
| |
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியே கதறியே கண்கள் மூடி என்பயன் எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ வத்தனுக் கிதேற்குமோ அறிவிலாத மாந்தரே. | 505 |
| |
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம் இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே. | 506 |
| |
உண்மையான மந்திர மொளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானதே உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே. | 507 |
| |
பன்னிரண்டு நாளிருத்திப் பஞ்சவண்ணம் ஒத்திட மின்னியவ் வெளிக்குள்நின் றுவேரெடுத் தமர்ந்தது சென்னியான தலத்திலே சீவன்நின் றியங்கிடும் பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்ம மாவரே. | 508 |