மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. | 516 |
| |
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள் நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் தூரதூர தூரமும் தொடர்ந்து கூட லாகுமே. | 517 |
| |
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கடோறும் மூழ்கிறீர் மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர் மண்டையேந்து கையரை மனத்திருத்த வல்லிரேல் பண்டைமால் அயன்றொழப் பணிந்து வாழ லாகுமே. | 518 |
| |
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல் ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே மாடுகொண்டு வெண்ணெயுண்ணும் மானிடப் பசுக்களே வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே. | 519 |
| |
உள்ளதோ பிறப்பதோ உயிர்ப்படங்கி நின்றிடும் மெள்ளவந்து கிட்டநீர் வினவவேண்டு மென்கிறீர் உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ள வாசலைத் திறந்து காணவேண்டு மாந்தரே. | 520 |
| |
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ. | 521 |
| |
நானும்அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன் வானில்உள்ள சோதி அல்ல சோதிநம்முள் உள்ளதே நானும்நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ தானதான தத்ததான தானதான தானனா. | 522 |
| |
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் நல்லதென்ற போதது நல்லதாகி நின்றுபின் நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் நல்லதென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே. | 523 |