பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்91


பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா !
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.
524
  
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.
525
  
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?
526
  
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதிவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்.
527
  
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.
528
  
பரம்இலாதது எவ்விடம்? பரம் இருப்பது எவ்விடம்?
அறம் இலாத பாவிகட்குப் பரம்இலை அஃது உண்மையே;
கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே.
529
  
மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே !
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே
மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.
530
  
சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்