நன்றி யுரைக்கவென் நாவு துடித்தது;
நண்பனைத் தேடி நடுங்கிய தென்குரல்!
கன்றுதன் தாயினைப் பார்க்கக் கதறிடும்
கண்களில் நீரொடு பார்வை கலங்கிடும்!
நின்று நெடுந்தொலை அவ்விதம் நோக்கினேன்
நேரில் இருந்த நறுமலர் அண்மையில்
சென்றதன் மேனி தழுவத் துணிந்ததும்
ஜீவிய சித்திரம் என்முன் தெரிந்தது!
(வேறு)
கண்ணன் எழில் முகம்
பார்த்தறி யீரோ!
காற்றில் அவன்குரல்
கேட்டறி யீரோ!
விண்ணில் - இருள் விழ,
வெள்ளி முளைக்க
வெற்றி எனக்குரல்
சேவல் எழுப்ப,
உண்மை புலர்ந்தது
மேதினம் என்ன,
உள்ளமென் நண்பனின்
பேரொடு பின்ன!
வண்ண நறுமலர்
சாய்ந்து தவிக்கும்
வாச மிகும் இதழ்
சோர்ந்து துடிக்கும்! |