ஆலையில்:
தொடர்ந்தடித்த காய்ச்சலிலே பலமிழந்து
சோகையென உருமாறி ரத்தம் வற்றி
உடல்துரும்பை மலைபோன்று சுமந்து சென்றான்
உணவற்ற தொழிலாளி - ஆலை தன்னில்
தடபுடலாய் வைத்தியத்தை நடத்து கின்ற
டாக்டரிடம் பயத்தோடும் சென்றான் - அங்கே
நடந்ததொரு நிகழ்ச்சியினைச் சொல்வேன்; நேர்மை
நலமுடையார் ஒருக்காலும் அமைதி கொள்ளார்!
அமெரிக்க நாட்டினிலே நடக்குங் காதல்
ஆனந்தக் கதையொன்றைப் படித்த வண்ணம்
தமைமறந்து ‘சிகரெட்’டின் புகைக்கூட் டத்தில்
தலைமறைய டாக்டருமே அமர்ந்தி ருந்தார்!
குமுறியெழும் இருமலுடன் இரைப்பும் தோன்ற
குடல்முழுதும் வலிதோன்ற நடை தளர்ந்து
அமைதிசூழ் அவ்வறையின் முன்னே சென்று
‘ஐயாவே’ என்றவனும் கெஞ்சி நின்றான்!
வாய்திறந்து மூடுமுனம் இருமல் சூறை
மடமடென நொறுக்கிற்று கண்ணி ரண்டும்
போய்ச் செருகிப் பின்வந்து கண்ணீர் சொட்டும்!
புலன்துடித்தான் தொழிலாளி; ‘அடடே இங்கு
நாய்மகனே ஏன்வந்தாய் இந்நே ரத்தில்?
நாசமாய்ப் போனாயா? கொள்ளை நோயா?
ஓய்ந்திருக்கும் நேரத்தில் வந்து விட்டாய்
உயிர்வாங்க’ எனச்சொல்லிக் குதித்தார் டாக்டர்!
காதல்ருசி தடைப்பட்டுப் போன தென்ற
காரணத்தால் டாக்டருக்குக் கோபம்; துன்பம்
வேதனையால் வாழ்க்கைருசி அற்றுப் போன
வெந்துயரால் தொழிலாளி கலங்கு கின்றான்!
சோதனைகள் எல்லாமும் தொழிலா ளர்க்கு;
துரைகளுக்கோ அதைப்பற்றிக் கவலை யில்லை;
காதகரைப் பொதுவிடத்தில் ஏற்றி வைத்தால்,
கடுங் கொலைகள்
நடக்காமல் என்ன நேரும்?
|