‘ஐயாவே! எனக்கின்று ‘லீவு’ வேண்டும்
அடியெடுத்து வைப்பதற்கும் முடிய வில்லை
பொய்யில்லை - சோதித்துப் பாரும்’ என்றான்
“புரளிபண்ண வந்தாயா? உன்னைப் பார்த்தால்
நெய்தடவி வைத்ததொரு கருங்கல்லைப் போல்
நிறைசிறிதும் குறையாமல் இருக்கின்றாயே!
கையாலே ஆகாத நாய்கள் - நொண்டிக்
காரணங்கள் பலிக்காது சொல்லி விட்டேன்!
சோம்பேறித் தனத்தாலே கெட்டு விட்டாய்
சோதாவைப் போல்சும்மா இருந்து விட்டு
தீம்புவந்து விட்டதுபோல் வந்து விட்டாய்
சீக்கிரமாய்ப் போஉன்றன் வேலையைப் பார்!
தாம்பூலம் வைத்துன்னை அழைத்துப் போக
டாக்டராய் நானிங்கே இருக்க வில்லை.
தேம்பாதே போ’ என்றார்; “வயிறு முற்றும்
செந்தழல் போல்எரிகிறதே” என்றான் ஏழை!
‘வெடுக்கென்று தாவியுமே எழுந்தார் டாக்டர்
வெறிபிடித்த பார்வையுடன், அலமா ரிக்குள்
அடுக்கியுள மருந்துகளில் ஏதோ ஒன்றை
அவசரமாய் எடுத்துவந்து கொடுத்து, வாயில்
வெடுக்கென்று போட்டுக்கொள் விழுங்கு’ என்றார்
வேதனையால் தொழிலாளி விழுங்கி விட்டான்
கெடுக்காதே வேலைசெயச் செல்வாய்; ஒன்றுங்
கேடில்லை நிற்காதே போ!’ என்றிட்டார்!
எடுத்தஅடி வைப்பதற்குள் கண்ணி ரண்டும்
இருளடைய தலைசுற்றக் கால்தள் ளாட
அடுத்தசிறு வாய்க்காலின் அருகே சென்றான்
அடிவயிறு கலக்கியது மயக்கத் தாலே
படுத்துவிட எண்ணியதும் கனவு லோகம்
பார்த்திட்டான், மனைவிமுகங் கண்டான்; அன்னாள்
எடுத்தவனை மார்போடும் அணைப்ப தைப்போல்
இருகையுங் காட்டியுமே அழைத்து நின்றாள்.
|