வாய்திறந்தான் ஏதோஓர் வார்த்தை சொல்ல
வாந்தியால் தரைமுழுதும் வெள்ள மாகச்
சாய்ந்திட்டான் தரையினிலே அலறிக் கொண்டே!
தலையெடுத்த நாள்முதலாய் உழைத்த தன்றி
வாய்த்தபலன் காணாதான், வறுமை யன்றி
வளம்படைத்து வாழாதான் உலகை விட்டுப்
போய்விட்டான்! மரணத்தை அணைத்துக் கொண்டான்!
புகல் கண்டான்! அமைதியிலே அமைதியானான்!
குடிசையில்:
சாக்குருவி கூவிற்று; பூனை ஒன்று
தடதடென ஓடிப்போய் மொந்தை தன்னைப்
போக்கிற்றுக் கீழ்தள்ளி; தரையின் மேலே
‘பொட்’டென்று வீழ்ந்த தொரு சப்தங் கேட்டுத்
தூக்கத்தை விட்டெழுந்து பார்த்தாள்: அந்தோ
துடிப்புற்றே ஏழைப்பெண் நடுங்கிப் போனாள்
ஏக்கம்அவள் நெஞ்சத்தைச் சுட்டெ ரிக்கும்!
இருளமைதி அச்சத்தை மிகவுண் டாக்கும்!
உடைந்தது மொந்தை! உடைந்தது வாழ்வும்!
தரையைக் கஞ்சி தஞ்சம் அடைந்தது!
நங்கை நலிவுடன் அழுது நடுங்கினாள்!
மனைவி மக்கள் பக்கலில் இருக்க
பஞ்சணை மீதில் படுத்துக் கிடந்தான்
முதலாளி என்னும் மூர்க்கன் கொடியன்!
அவன்கால் வருடும் அறிவிலா ‘டாக்டர்’
காதல் புத்தகம் கையில் பிடித்துக்
கவலையிலாமல் கண்துயில் கொண்டான்!
ஏழை மடிந்தால் அவர்களுக் கென்ன?
துரும்புவீழ்ந் ததுபோல் துரைகள் நினைப்பார்!
உழைப்பவர்க் கிங்கே உரிமைகள் இல்லை!
உணவும் இடமும் உடையும் இல்லை!
கணவன் இறந்தபின் கதியிலா ஏழைப்
பெண்மணி எவ்விதம் பிழைப்பாள் அந்தோ!
இவ்விதக் கொடுமைகள் இனியும் நடக்க
|