உன்னருங் காதலைப் பாடிட - எனை
ஊக்கமுடன் அழைத்தாயடி!
மன்னவர் நீட்டிய வாளிலே - வைய
மக்களின் மார்பு பிளந்துமே
உன்னதமாகிய ஆவியை - இழந்
தூற்றிடும் ரத்தத்தைப் பாரடி!
அன்னதைப் பாடிட ஆயிரம் - பல்
லாயிரம் தோழர் அழைக்கிறார்!
மக்கள் மடிந்திடும் போதிலே - அவர்
மானங் குலைந்திடும் போதிலே
கெக்கலி கொட்டியும் ஆடியும் - பல
கேளிக்கைப் பேசியும் பாடியும்
பக்க மிருப்பவன் பாதகன் - அவன்
பாலையின் வேடரைப் போன்றவன்!
செக்கடி மாடுபோல் வாழ்வதோ - என்றன்
சிந்தைக் கினியளே சொல்லடி!
மக்களுக்காக உழைக்கவும் - அவர்
வாழ்விடர் முற்றும் ஒழிக்கவும்
தக்கசெயல் செய எண்ணினேன் - எனைத்
தாவி யழைத்தது தேசமும்!
இக்கருத் தோடுனைக் கேட்கிறேன் - உன்றன்
இன்பம் எதிலுண்டு சொல்லடி?
இக்கணந் தொட்டு நம் ஆசையும் - காதல்
இன்பமும் மக்களின் தொண்டடி!
‘முன்னணி’ - 1948
|