பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 35

திசையதிர நடக்கிறது சீனத்து 
செஞ்சேனை

‘ஓ ஓ’ என் றார்ப்பரித்தே எழுந்ததுபார் ஊழிப்போர்! 
       உலக மெங்கும்,
‘ஆ ஆ’ என் றதிசயிக்க ஆசியத்தாய் மனங்குளிர 
       அடிமைக் கோட்டைக்
காவலர்கள் தலைமீதில் சாவரக்கன் அடிவைத்துக் 
       களக்கூத் தாட,
கோவேந்தர் குலம்நடுங்க குடிமக்கள் கொதித்தெழுந்தார் 
       சீன நாட்டில்!

நல்லோர்க்குச் சாவோலை அனுப்பினான்; கொலைஞர்க்கு 
       நண்ப ரானான்;
இல்லாத கொடுமைகளைச் சிருஷ்டித்து மகிழ்வுற்றான்; 
       இவ்வா றாங்கே
பொல்லாங்கே அரசாகிப் புரட்டுகளே சட்டமாய்ப் 
       புகுந்த போதில்
வல்லவர்கள் செஞ்சேனை கண்வைக்க‘சியாங்’ வெறியன் 
       நடுங்கி வீழ்ந்தான்!

ஆசியத்து மாந்தர்களின் சதை பிளந்து மிருகமென 
       அவர்கள் ரத்தம்
நேசித்துக் குடித்திட்ட நிர்மூடர், வானிடிந்து 
       நிலம்வீழ்ந் தாற் போல்
ஓசைபட, ‘படபடெனச்’ சரிந்திட்டார்; செஞ்சேனை 
       யுத்தத் தின்முன்
ஈசலென மடிந்திட்டார்; அமெரிக்க மணற்கோட்டை 
       இடிந்த தாங்கே!