இந்திய ஏழை துளிர்க்கிறான் - அவன்
எண்ணத்தில் சீனம் சுவர்க்கமாய்
வந்து கனவுகள் வீசுது - புது
வன்மையைத் தேகத்தில் ஊட்டுது!
சிந்தையில் ஊக்கம் அளிக்குது - ‘அறம்
செய்க’இவ் வாறென் றியம்புது!
நொந்தவர் தோளும் உயருது - பலம்
நூறு நூறாயிரம் ஆகுது!
யுகங்கள் பிரிவினி இல்லை காண் - தர்மம்
ஒன்று புதுயுகம் ஆகுமே!
நகமும் சதையும் போல் மானிடர் - எந்த
நாட்டினர், தீவினர் ஆயினும்
சகத்தினில் ஒற்றைக் குடும்பமாய் - உயர்
சாந்தம் நிலவிட வாழ்ந்திடும்
புகழுறு தர்மம் வருகுது - நகை
பூத்த முகத்துடன் சீனத்தில்!
எங்கும் அதன்ஒளி வீசிடும் - இனி
ஏது தடைகள், அடிமைகள்?
சங்கம் எடுத்து முழக்குவோம் - நாம்
தாளங்கள் கொட்டியே ஆடுவோம்!
மங்கள வாழ்த்துகள் பாடுவோம் - அறம்
வாழ்க எனக்களி கூறுவோம்
செங்க மலஒளி மேவிடும் - செஞ்
சீன விழாவைக் கொண்டாடுவோம்
‘முன்னணி’ - 1948
|