களஞ்சென்றேன், வண்டியிலே நெல்லை யேற்றிக்
களிப்புடன் செல்கின்ற மிராசு தாரின்
உளஞ்சிதற, என்றைக்கும் கேட்டி ராத
ஒருபெரிய கேள்வியினைக் கேட்டேன்! ‘நெல்லை
விளைவித்தோன் யார்?,’ என்றேன், எடுத்துப் போக
வேற்றவன் நீ ஏன் வந்தாய்?, என்று கேட்டேன்
“இளைக்கின்ற என் மனைவி மக்க ளுக்கே
இவ்விளைச்சல் உரிமை!” யெனக்கூச்ச லிட்டேன்.
எங்கிருந்தோ துப்பாக்கி வெடிக்கும் சப்தம்!
என் தலையை உராய்ந்ததொரு தோட்டாக் குண்டு!
தொங்கியதென் முன்னிலையில் இருள்வி லங்கு!
தொட்டிழுத்துச் சிறைக்கவதம் அடைத்த தென்னை!
“அங்குள்ளார் என் மனைவி, மக்கள்” என்றேன்
“அவர்களெலாம் இறந்தார்கள்” என்றார் யாரோ!
“பொங்கயிலா?” என்றலறி விழித்துக் கொண்டேன்
பொழுதுபுலர்ந் திட்டதுவாம் சத்தி ரத்தில்!
என் மனைவி மக்களெலாம் பசியால் வாடி
இறந்ததனைக் கனவினிலும் மறப்ப துண்டோ?
என்னுடைய “பனைக்குடி”யில், சுடுகாட் டின்கண்
என்வரவை எதிர்நோக்கி உறங்கு
கின்றார்!
பொன்கொழிக்கும் தஞ்சையென இங்கு வந்தேன்
புழுதிக்குக் குறைவில்லை” என்றே எண்ணி
என்னெதிரில் நிற்கின்ற சுவரைப் பார்த்தேன்-
‘என்னுரிமை’ எனக் கனவில் கண்ட காட்சி!
“உழவர்க்கே நிலம் வேண்டும்! யாவ ருக்கும்
உணவளிக்கும் அந்நாளே பொங்கல்” என்று
முழக்கமிடும் வரிகள்தமைக் கண்ணால் கண்டேன்
முன்னோக்கி நடந்திட்டேன்; “இந்தச் சொல்லை
எழுதியவர் என் தோழர் ஆவார்” என்றே
இணையற்ற வீரன்போல் நடக்க லானேன்!
‘பழந்தமிழர்த் திருநாளே பொங்கல்!” என்று
பசப்பு மொழி சிலர் சொன்னார். சீச்சீ என்றேன்;
|