பெற்று வளர்த்திட்ட இன்மகனை, இங்குப்
பேணி வளர்ப்பது குற்றமென்றால்
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ? அன்றி
தர்மம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடைப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடந்தரவும்
அன்னை யெனக்கிங் குரிமையுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்!
என்னுடை முன்னவர் தம்பழக்கம்; எனை
யீன்றிட்ட அன்னையின் தன் பழக்கம்!
அன்னவள் தன்முலைப் பாலினிலே இந்த
ஆசை உறவுண்டு நான் வளர்ந்தேன்
நீண்ட நெடுங்காலம் இவ்வுறவை, இந்த
நீணிலம் போற்றி வளர்த்தது காண்!
குற்றம் எனச்சட்டம் கொண்டுவந்தீர், அதில்
கொஞ்சமும் மானி டத்தன்மை யுண்டோ?
மானிட ஜாதிதன் முன்னிலையில் உங்கள்
மானம் அழிந்திடும் கண்டிடு வீர்!
கொந்தும் கொடுஞ்சிறை செய்திடினும், உயிர்க்
கொள்கையின் சக்தி குறைந்திடு மோ?
வளரும் சமுதாயத் தின்வழி யில்,தடை
வைத்திடும் சட்டங்கள் வாழ்ந்திடு மோ?”
என்றனள் திக்கை இடித்துரைத்தாள், புவி
இன்னுயிர் காத்திடும் அன்னை யடா!
‘ஆம்’ எனச் சொல்லிடும் கோயில்மணி, ஒலி
ஆரவாரஞ் செயும் அக்கணத் தே!
|