நேரே நிமிர்ந்தவுனை நெஞ்சில் அடித்துவிட்டோம்,
கூரேறும் ஈட்டியினால் குத்திவிட்டோம் உன்முதுகில்!
மெய்யுரைக்க வந்தவுனை ‘மேலுலகம்போ’ என்றோம்,
பொய்யுரைக்க எண்ணமிட்டுப் ‘போ போ’ என் றார்ப் பரித்தோம்!
பட்டதெலாம் போதுமென்று பாரதிநீ போய்விட்டாய்!
விட்டோமா உன்னை விரட்டிப் பிடித்துன்றன்
பாட்டைத் திருத்திப் பதத்தைப் தனியாக்கிப்
போட்டோம், அதற்காகப் போட்டோம் சிறையிலுனை!
தமிழர்கள்:
சென்றநாள் போகட்டும், தேய்ந்தொழிந்து சாகட்டும்,
இன்று பிரதிக்ஞை ஏற்கும் நாள் ஆகட்டும்!
முக்கோடி மக்கள் முகமலர, உன்நாமம்
திக்கெட்டும் போய்ஒலிக்கச் செய்வோம் திருநாளை!
உன்போல் உரமுடையார் உன்போல் திறமுடையார்
உன்போல் உளமுடையார் ஓர்கோடிப் பேர் எனினும்,
அத்தனைபேர் சொல்லுக்கும் அள்ளி அள்ளித் தந்திடுவோம்
முத்தமிழாம் பொற்கவிக்கு மூவுலகம் ஈடாமோ?
மூட்டும் கனலே! முகையவிழ்ந்த மாமலரே!
பாட்டுப் பொருளே! பதப்பொருளே! பாரதியே!
ஆரா அமுத ருந்தி ஆனந்தம் உற்றவர்போல்,
தீராத ஆசையொடு தேன்கவிதை பாடியவுன்
பாட்டுண்டு, நாங்கள் படித்த பதமுண்டு!
ஓட்டில் அடித்தலறும் ஒப்பாரி சிப்பாய்கள்
காலம் உதைக்கஅதன் காலில் உருண்டழியக்
கோலம் புனைந்து‘கவி கோ’வென்று கூச்சலிட்டார்!
|