இன்னார்க்கு நாள்விடிந்தால் எத்தனையோ பட்டங்கள்!
மின்னார் அணிதிகழ மேலாடை, நூலாடை!
‘கவி’யென்று பேரிட்டுக் கட்டுகின்ற பட்டாடை,
செவியைத் துளையிட்ட ‘செய்திக் கதி’ராடை!
ஒற்றைத் தமிழ்ச்சொல் உருவம் உணர்ந்தறியார்,
இற்றைக் கவியாம்! இவர்பேர் பெரும்பேராம்!
பேத்தும் ‘கவிமகனார்’ பித்தரென ஆடிதமிழ்க்
கூத்தாடப், பேய்கள் குழாமாட ஆடுவராம்!
பெண்போல் உடைதறித்துப் பேய்போலும் ஆடாதீர்,
பண்பாடும் பாவனையாய்ப் பல்லை இளிக்காதீர்!
பேய்என்றால் ‘போ எனலாம், பெண்என்றால் ‘வா’எனலாம்!
‘சீ’ இவர்கள் வேடம் தெருசிரிக்கப் போகிறது!
பொன்னாடை போர்த்துவதும் பூவாடை சாத்துவதும்
பன்னாடை நெஞ்சப் பதர்களுக்கா? என்கின்றோம்!
கல்லும் உருகக் கவிசொல்லும் பாரதியே,
இல்லைஇனி இல்லை இவர்க்கு மரியாதை!
பாட உனதுபுகழ் பாவலர்கள் வந்துற்றோம்!
நாட உனதுநெறி நல்லவர்கள் வந்துற்றோம்!
உனது பரம்பரையே உண்மையாம்! மற்றுன்
கனவே நவநவமாய்க் காட்சி தரும்கவிதை!
‘மனிதன்’ - 1954
|