பக்கம் எண் :

98தமிழ்ஒளி கவிதைகள்2

எதுவுடமை? எதுவுலகம்? 
       என்று காணா
ஏழைகளும் அவர் இனத்தின்
       எளியோர் தாமும்
பொதுவுடைமை வந்தவுடன்
       அண்ட கோளப்
புதல்வர்களாய் அமரர்களாய்ப்
       பொலிந்து தோன்ற,

‘அதுவுடைமை’, ‘அறிவுடைமை’
       சோவியத்தின்
‘அன்புடைமை’ எனக்கொண்டார்
       அஃதே யன்றிப்
‘புதுவுடைமை விஞ்ஞானம்’
       என நவம்பர்
புரட்சித்தாய் கூறினாள்
       புவியோர்க் கெல்லாம்!

படைகலைய அன்பொன்றே
       பாரை ஆளப்
பசிகலைய ஆனந்தப்
       பாட்டு மூளத்
தடைகுலைய நல்வாழ்வுத்
       தாகம் ஓங்கத்
தாழ்வின்றி ஏழ்இசைபோல்
       வாழ்வின் நாதம்,

தொடைபுணர இன்பத்தேன்
       துளிகள் சிந்தத்,
“தொல்லுலகின் சுடரொலியே!
       வாழ்க!” என்ற
நடைபுணர நாளெல்லாம்
       புரட்சித் தாயே!
நவம்பர்நாள் வந்தவளே!
       நல்வாழ்த் துக்கள்!

‘ஜனசக்தி’ - 1959