முப்பெரும் புலவர்
தமிழர்க ளெல்லாம் பெருமையுடன்
தலைநிமிர்ந் தென்றும் நின்றிடவே,
அமிழ்தம் போன்ற நூல்களினை
அளித்தவர் முப்பெரும் புலவர்களாம்.
அருமை மிக்க உண்மைகளை
அழகாய் உணர்த்தும் தனிநூலாம்
திருக்குறள் தந்த பேரறிஞர்
தெய்வப் புலமை வள்ளுவராம்.
இந்தியர் போற்றும் இதிகாசம்
இராமா யணம்அதைச் சுவையுடனே
செந்தமிழ் மொழியில் நமக்காகத்
தந்தவர் கம்பர்; கவிமன்னர்!
கற்பின் பெருமை உலகறியக்
காட்டும் சிலப்பதி காரம்எனும்
அற்புத மான காவியத்தை
அளித்தவர் அடிகள் இளங்கோவாம்.
|