பக்கம் எண் :

மலரும் உள்ளம்107

தங்கையின் நடனம்

தைதை என்றே ஆடு கின்றாள்
   தங்கை மீனா ஜோராய் - என்
   தங்கை மீனா ஜோராய் - அவள்
கையைக் காலை ஆட்டு கின்ற
   காட்சி தன்னைப் பாராய் - அந்தக்
   காட்சி தன்னைப் பாராய்.

கையில் புல்லாங் குழலெ டுத்துக்
   கண்ணன் போல வருவாள் - மாயக்
   கண்ணன் போல வருவாள்.
மையைக் கண்ணில் தீட்டிக்கொண்டு
   மானைப் போலப் பார்ப்பாள் - புள்ளி
   மானைப் போலப் பார்ப்பாள்.

தில்லைநட ராஜ ரைப்போல்
   திருந டனம் புரிவாள் - இங்கே
   திருந டனம் புரிவாள்.
எல்லை யில்லா மகிழ்வுடனே
   எவரும் பார்க்கச் செய்வாள் - நன்றாய்
   எவரும் பார்க்கச் செய்வாள்.