பக்கம் எண் :

112மலரும் உள்ளம்

அழைக்கும் ரோஜா

வருக வருக என்கிறாய்.
   மகிழ்ச்சி பொங்க அழைக்கிறாய்.
அருமை ரோஜா, நீயுமே
   அழகுச் சிரிப்பு சிரிக்கிறாய்.

தொட்டுப் பார்க்க மென்மையாய்ப்
   பட்டுப் போல இருக்கிறாய்.
மட்டில் லாத வாசனை
   வாரி வாரி இறைக்கிறாய்.

கண்ணைக் கவரும் உன்னைநான்
   கண்ட வுடனே கொய்யவும்
என்றன் தலையில் அணியவும்
   இச்சை கொண்டேன். ஆயினும்,

என்றன் தலையில் வைத்தபின்
   எதிரில் காண இயலுமோ?
உன்றன் அழகும் தெரியுமோ?
   உனக்கே உயிரும் இருக்குமோ?