காந்தியும் கதரும்
அக்டோபர் மாதம் இரண்டினிலே - காந்தி
அவதரித் தார்எனப் போற்றுகிறோம்.
தக்கவி தத்திலே காந்தி மகானுக்குச்
சகலரும் அஞ்சலி செய்திடுவோம்.
காந்தி பிறந்தஇவ் வாரத்தினை - நாமும்
கதர்வார மாகக்கொண் டாடிடுவோம்.
சாந்த வடிவமான காந்திமகான் - ஆன்மா
சாந்தி அடைந்திடச் செய்திடுவோம்.
கையினால் நூற்றது, நெய்ததுவாம் - இந்தக்
கதரை அணிந்திட வேண்டுமென்றே
ஐயனாம் காந்தி உரைத்துவந்தார் - இதை
அகிலம் உணர்ந்திடச் செய்துவந்தார்.
கண்போல் கதரைக் கருதிவந்தார் - அவர்
கைராட்டை யால்தினம் நூற்றுவந்தார்.
உண்ணா விரதம் இருக்கையிலும் - அவர்
ஒருநாளும் நூற்கா திருந்ததில்லை!
|