செஞ்சிலுவைச் சங்கம்
இத்தாலி தேசத்துப் போர்க்களமாம் - அதில்
எண்ணற்ற வீரர்கள் மாண்டனராம்.
எத்தனை யோவீரர் காயமுற்றே - அங்கு
இறக்கும் நிலையில் இருந்தனராம்.
கைகள் முறிந்தவர், கால்கள் ஒடிந்தவர்,
கண்கள் இழந்தவர் பற்பலராம்.
"ஐயையோ! அப்பப்பா! அம்மம்மா!" - என்றவர்
அலறி, அலறித் துடித்தனராம்.
தண்ணீர் கிடைக்காத காரணத்தால் - பலர்
சாகக் கிடந்தனர் அவ்விடத்தே.
புண்களை ஆற்ற வழியுமில்லை - அந்தோ!
புழுவாய்த் துடித்தனர் வீரரெல்லாம்.
உள்ளம் உருக்கிடும் காட்சிஇதைக் - கண்டே
உத்தமர் டூனான்டு என்பவரும்
சொல்லொணா வேதனை உற்றனராம் - பிறர்
துன்பம் துடைக்க நினைத்தனராம்.
|