பக்கம் எண் :

120மலரும் உள்ளம்

உதவிக்குப் பலரை அழைத்தனராம் - தினம்
   ஊக்க முடனே உழைத்தனராம்.
அதனால், அடிபட்டு வீழ்ந்தவரில் - பல
   ஆயிரம் வீரர் பிழைத்தனராம்.

போர்க்களம் தன்னிலே கண்டவற்றை - அவர்
   புத்தக மாக எழுதினராம்.
பாரினில் உள்ள அறிஞரெலாம் - அதைப் 
   படித்ததும் உள்ளம் உருகினராம்.

அண்ணனும் தம்பி போலஉலகினில்
   அத்தனை மக்களும் வாழ்ந்திடவே,
எண்ணினர்; எழுதினர்; பேசினர்; - பிறருக்கு
   எடுத்துக்காட் டாக விளங்கினராம்.

சீரிய ரான அவர்தம் முயற்சியால்
   "செஞ்சிலுவைச் சங்கம்" தோன்றியதாம்.
நேரிய வழிகளில் பற்பல தொண்டுகள்
   நித்தம் அச்சங்கமே செய்திடுமாம்.

நோயின்றி வாழ்ந்திடச் செய்வதுவும் - பிறர்
   நோயுற்ற போதில் உதவுவதும்
நேயமாய் உலகினில் வாழ்வதுவும் - துன்பம்
   நீக்கலும் முக்கிய கொள்கைகளாம்.