பக்கம் எண் :

மலரும் உள்ளம்133

உமியும் அரிசியும்

உழுத வயலில் அழகனும்
   உமியை விதைத்து வைத்தனன்
முளையும் கிளம்ப வில்லையே;
   மூன்று மாதம் ஆனதே!

உழுத வயலில் அரிசியை
   ஓடி ஓடி விதைத்தனன்.
முளையும் கிளம்ப வில்லையே;
   மூன்று மாதம் ஆனதே!

உழுத வயலில் அரிசியும்
   உமியும் சேர்ந்த நெல்லையே
அழகன் விதைத்து வைத்தனன்.
   அதுவும் வீணாய்ப் போகுமோ?

இல்லை, இல்லை. முளையுமே
   எழும்பி மேலே வந்தது.
பல்லைக் காட்டி அழகனும்
   பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனன்.