சுந்தர் தேர்ச்சி பெற்றனன்.
சோமு தோற்று விட்டனன்!
இந்த முடிவைக் கண்டதும்
ஏங்கிச் சோமு துடித்தனன்.
அந்தச் சமயம் அவனையே
அழைத்தார் பள்ளித் தலைவரும்.
வந்து நின்ற அவனிடம்
வார்த்தை கூற லாயினர்;
“சுந்தர் என்ற பையனைத்
துணிந்து பார்த்து எழுதியே
இந்தப் பரீட்சை தேறலாம்
என்று கோட்டை கட்டினாய்.
ஊரை ஏய்க்கப் பார்த்திடும்
உன்றன் எண்ணம் பலிக்குமோ?
யாரை ஏய்க்க நினைப்பினும்
என்னை ஏய்க்க முடியுமோ?”
கெட்டிக் காரச் சோமுவோ
கேட்டான் இந்தச் சொற்களை.
தட்டிக் கூற எண்ணினன்.
தவறோ அவனைத் தடுத்தது!
|