பக்கம் எண் :

மலரும் உள்ளம்169

காவல்காரர்

சட்டை மேலே கோட்டு மாட்டிச் 
   சரிகை போட்ட வேட்டி கட்டி,
நட்ட நடுவே தோட்டம் தன்னில் 
   ராஜா போலே நின்றி ருந்தார்.

இரவும் பகலும் தூங்கி டாமல் 
   இங்கு மங்கும் நகர்ந்தி டாமல் 
பெருமை யோடு காவல் காப்பார் 
   பெயரில் லாத காவல் காரர்.

காக்கை குருவி அங்கே வந்தால்,
   காவல் காரர் நிற்கக் கண்டு 
சீக்கி ரத்தில் வந்த வழியே
   திரும்பி ஓடும் பயந்து கொண்டு.

காற்று பலமாய் அடித்த தாலே,
   கனத்த மழையும் பெய்த தாலே,
நேர்த்தி யான அவரின் உடைகள் 
   நித்தம் கிழிந்து வந்த தையோ!