பக்கம் எண் :

மலரும் உள்ளம்185

மயிலுக்குப் போர்வை

இயற்கை அழகினைக் கண்டுகண்டு - பெரும் 
   இன்ப மடைந்திடும் ஓர்அரசன்
உயர்ந்த மலைகளைக் கண்டிடவே- மிக 
   உல்லாச மாகக் கிளம்பினனே.

மலைவளம் கண்டு வருகையிலே - அங்கு
   மடமட வென்று மழைபொழிய 
பலகிளை உள்ள மரத்தடியில் - சென்று
   பதுங்கினன் அந்த அரசனுமே.

பயத்தால் உடலும் நடுங்குதல்போல் - குளிர்
   பரவிட மன்னன் நடுங்கினனே.
உயர்ந்த மதிப்புள்ள போர்வையினால் - நன்றாய்
   உடம்பை இறுகவே மூடினனே.

மேகங்கள் கூடிடக் கண்டதுமே - அங்கு 
   வேகமாய் ஓர்மயில் ஓடிவந்தே,
தோகை விரித்துநின் றாடியதே - மேலும் 
   தொண்டையைத் தூக்கி அகவியதே!