பக்கம் எண் :

மலரும் உள்ளம்205

பட்பட்!

வெடிகள் வெடிக்கும் சத்தம் கேட்டு
   விரைந்து நானும், நண்பரே
குடுகு டென்றே அறைக்குள் ஓடிக்
   குந்தப் போனேன் மூலையில்.

இருட்டு அறையில் பதுங்கி யிருந்த
   திருட்டுப் பூனை மீதிலே
குருட்டுத் தனமாய்க் காலை வைத்தேன்.
   குப்பென் றதுவும் பாய்ந்தது!

குப்பென் றதுவும் பாய்ந்து வெளியில்
   குதித்தே ஓட, அதிர்ச்சியில்
தொப்பென் றங்கே தரையில் வீழ்ந்தேன்.
   தொல்லை மேலும் தொடர்ந்தது.

அச்சம் கொண்டு வீழ்ந்த சமயம்
   அடியேன் கைகள் பட்டதால்,
பட்ச ணங்கள் இருந்த தகரம்
   படப டென்று சரிந்தது!