பால்காரரே
(கன்றுக்குப் பால் விடாமல் கறக்கும் பட்டணத்துப்
பால்காரர் ஒருவரைப் பார்த்து ஒரு சிறுவன் பாடுகிறான்).
காலை மாலை வேளையிலே பால்காரரே - தினம்
கன்றில் லாமல் பால்க றக்கும் பால்காரரே.
பாலை யெல்லாம் கறந்துவிட்டுப் பால்காரரே - அதைப்
பத்து மடங் காக்கி விற்கும் பால்காரரே.
சொட்டுப் பாலும் விட்டிடாது பால்காரரே - கன்றைத்
துடிது டிக்கச் செய்து விட்டீர், பால்காரரே.
ஒட்டி உலர்ந்து கன்றுசாக, பால்காரரே - நீரோ
உரலைப் போலப் பருக்கிறீரே பால்காரரே!
துள்ளி ஓடும் கன்றைக் கொன்று பால்காரரே - அதன்
தோலி னாலே கன்று செய்தீர் பால்காரரே!
கொள்ளை லாபம் அடிப்பதற்கோ பால்காரரே - இந்தக்
கொடிய செயல் செய்துவிட்டீர் பால்காரரே?
கொன்று விட்டீர் அருமைக் கன்றை, பால்காரரே - இன்னும்
கொஞ்சம் கூட இரக்க மில்லை பால்காரரே.
கன்றில்லாத பசுவை ஏய்த்துப் பால்காரரே - நித்தம்
கறந்து கறந்து விற்கிறீரே பால்காரரே!
|