வீடு கட்டுவோம்
செங்கல் வேண்டாம், சிமிண்டும் வேண்டாம்
செலவும் வேண்டாம் தம்பி - வெகு
சீக்கி ரமாய்க் கட்டிடலாம்
சிறந்த வீடு தம்பி.
இரும்பும் வேண்டாம், மரமும் வேண்டாம்
எதுவும் வேண்டாம் தம்பி - மிக
எளிதில் நாமும் கட்டிடலாம்
இனிய வீடு தம்பி.
கொத்தர் வேண்டாம், தச்சர் வேண்டாம்
கொல்லர் வேண்டாம் தம்பி - ஒரு
குறையும் இன்றிக் கட்டிடலாம்
அருமை வீடு தம்பி.
கதவு வேண்டாம், சன்னல் வேண்டாம்
கம்பி வேண்டாம் தம்பி - உள்ளே
கள்ளர் எவரும் நுழைய மாட்டார்
கவலை வேண்டாம் தம்பி.
|