மழை
வீதி நடுவில் ஒன்று சேர்ந்து
விதம் விதமாய் ஆடினோம்.
பாதி ஆட்டம் ஆடும் முன்னே
"படப" டென்று பெய்தது.
வெள்ளிக் கம்பி போலப் பெய்து
விரட்டி விட்ட தெங்களை.
துள்ளிக் குதித்து வீடு சென்றோம்.
துரித மாக யாவரும்.
நின்ற பிறகு வீதி யெங்கும்
நெடுகத் தண்ணீர் ஓடவே
ஒன்று சேர்ந்து குடுகு டென்றே
ஓடி வந்தோம் யாவரும்.
கத்திக் கப்பல், சண்டைக் கப்பல்
கணக்கில் லாமல் நாங்களும்
எத்த னையோ மிதக்க விட்டோம்
எல்லாம் காகி தத்திலே!
|