பாட்டுப் பாடி நமது கொடியை
வணங்கிடு வோமே - நாம்
பலரும் ஒன்றாய்க் கூடி ஆடி
மகிழ்ந்திடு வோமே.
கோட்டை, வீடு, வீதி யெங்கும்
கொடி பறக்குமே- இன்று
கோடி கோடி மக்க ளுக்கும்
இன்பம் பொங்குமே!
சுதந்தி ரத்தின் பெருமை தன்னை
உணர்ந்து வாழுவோம் - மக்கள்
துயரம் யாவும் துடைப்ப தற்கே
உறுதி பூணுவோம்.
இதயம் ஒன்றி இந்தி யத்தாய்
பெற்ற பிள்ளைகள் - நாம்
இன்ப முற்று வாழு தற்கு
வழிகள் காணுவோம்.
|