பக்கம் எண் :

மலரும் உள்ளம்91

பார்த்துப் போ தம்பி

பார்த்துப் போ தம்பி - நன்றாய்ப்
பார்த்துப் போ தம்பி.
பள்ளிக் கூடம் செல்லும் போது
பார்த்துப் போ தம்பி.

மோட்டார் வரும், ஜட்கா வரும் 
   மூர்க்க மாக லாரிவரும்.
ஆட்டோ ரிக்ஷா படப டென்றே
   அலறிக் கொண்டே ஓடிவரும்.
(பார்த்துப்)

தெருவில் குறுக்கும் நெடுக்கு மாகச்
   செல்லல் தீமை ஆகும் தம்பி.
விரைந்தே ஓடும் வண்டி யாலே
   விபத்து நேரக் கூடும் தம்பி.
(பார்த்துப்)

கல்லும் முள்ளும் உடைந்து போன
   கண்ணா டியும் கிடக்கும் தம்பி.
செல்லும் போது காலில் நல்ல 
   செருப்புப் போட்டுச் செல்வாய் தம்பி.
(பார்த்துப்)