தம்பியும் தும்பியும்
அதோ பாராய் தம்பி!
அதன் பெயரே தும்பி!
தோட்டம் தன்னில் அங்கு மிங்கும்
சுற்றிச் சுற்றிப் பறக்குது.
வேட்டை யாடும் துப்பாக் கிபோல்
மெலிந்து நீண்டு இருக்குது.
அதோ பாராய் தம்பி!
அதன் பெயரே தும்பி!
கண்ணா டிபோல் சிறகு மின்னிக்
காற்றில் மெல்ல அசையுது!
கண்ணி ரண்டும் முன்னால் நின்றே
என்னை, உன்னைப் பார்க்குது!
அதோ பாராய் தம்பி!
அதன் பெயரே தும்பி!
குட்டிப் பறவைக் கப்பல் போலே
கீழும் மேலும் செல்லுது!
எட்டிப் பிடிக்கப் போனால் என்னை
ஏய்த்துப் பறந்து போகுது!
அதோ பாராய் தம்பி!
அதன் பெயரே தும்பி!
|