பக்கம் எண் :

94மலரும் உள்ளம்

கார்த்திகைத் தீபம்

கார்த்திகைத் தீபமம்மா - எங்கும்
   கண்டிடு வாயே அம்மா.
பார்த்திடப் பார்த்திடவே - உள்ளம்
   பரவச மாகுதம்மா.

கூடங்கள் எல்லாமும் - அம்மா
   கோபுர மேலேயும்
வீடுகள் யாவிலுமே - ஒளி
   வீசுது பாராயம்மா.

சிப்பாய்கள் நிற்பதுபோல் - அதோ
   தீப வரிசையம்மா,
எப்போதும் இப்படியே - இருந்தால்
   இன்பம் பெருகுமம்மா.

திருவண் ணாமலையில் - கார்த்திகைத்
   தீப தரிசனமாம்.
அருமை அருமையென்பார் - அங்கே
   அவசியம் போவோமம்மா.