பக்கம் எண் :

மலரும் உள்ளம்95

நான் குழந்தையானால்

சின்னஞ் சிறிய குழந்தையாய்
இன்று நானும் இருந்திடின்.

என்னை அம்மா தூக்கித் தூக்கி
   இடுப்பில் வைத்துக் கொள்ளுவாள்.
சின்னஞ் சிறிய கன்னம் இரண்டும்
   சிவக்கச் சிவக்கக் கொஞ்சுவாள்.
(சின்னஞ்)

நிலவைக் காட்டிக் காட்டி எனக்கு
   நெய்யும் சோறும் ஊட்டுவாள்;
“உலகில் உன்போல் உயர்ந்த செல்வம்
   உண்டோ?” என்றும் போற்றுவாள்.
(சின்னஞ்)

பொம்மை யெல்லாம் நிறைய நிறையப்
   பிரிய மோடு வாங்குவாள்.
“தம்பி மோட்டார்! பார்பார்”என்று
   சாவி கொடுத்தே ஓட்டுவாள்.
(சின்னஞ்)