பிறைச்சந்திரன்
நறுக்கி எறிந்த நகத்தைப் போல
இருக்கும் நிலாவே - நீ
நகர்ந்து நகர்ந்து போவ தெங்கே?
சொல்லு நிலாவே.
ஓடம் போல வானில் ஊர்ந்து
சொல்லும் நிலாவே - நான்
உன்மேல் ஏறிக் கொள்ள லாமோ?
சொல்லு நிலாவே.
கொம்பைப் போலக் கூர்மை யாக
இருக்கும் நிலாவே - என்னைக்
குத்திக் கீழே தள்ளு வாயோ?
சொல்லு நிலாவே.
வில்லைப் போல வளைந்தி ருக்கும்
வெள்ளை நிலாவே - நீ
வேட்டை யாட உதவு வாயோ?
சொல்லு நிலாவே.
|