பக்கம் எண் :

புகழ் மலர்கள்

யாருக்கு வாக்குச் சீட்டு?

உழைக்கும் மக்களே ஆட்சிக் குரியவர்
அழைப்பீர் அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவீர்.

அரசியலையே தொழில் ஆக்கிக் கொண்டவர்
சுரண்டல்பேர் வழிகள், நாட்டின் துரோகிகள்.
அனை த்துடைமையும் மக்களுக் காமெனும்
நினைப்பில் லாதவர் நேற்றே இறந்தவர்.

கண்ட இடமெங்கும் செத்த கொள்கைகள்
உண்டு கொழுக்க ஊரை ஏய்க்க
எத்தனை கட்சிகள் எத்தனை கொள்கைகள்
அத்தனையும் இந்நாட்டுக் குழைத்திடும் எண்ணம்
அணுவள விருப்பினும் அனைவரும் ஒன்றாய்
இணைவது தானே இயல்பு, சிறப்பு!

வேற்றுமை எந்த உருவில் விளையினும்
வேற்றுமை தானே ஒற்றுமை ஏது?

தேர்தலில் நிற்கும் தில்லு முல்லுக்
காரர் அனைவரும் காசு பதவி

அதிகாரத்திற்கே ஆலாய்ப் பறப்பவர்,  
குதிக்கும்இக் கொண்டான் மார்களை நாட்டில்
தேர்ந்தெடுத் தனுப்புதல் திருடரை
தேர்ந்தெடுத் தனுப்பும் தீமை ஆகுமே!






( 5 )




 
( 10 )






( 15 )




( 20 )

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

ஊர்ஊருக்கும் ஊரில் உள்ள
ஒவ்வொரு தெருக்கும் உருப்படாதவர்
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்என்று
கோயிலை எழுப்பிக் கும்மிட் டலைகிறார்.
வாயிலில் பார்ப்பான் வயிற்றுப் பிழைப்புக்கு
கல்தச்சுக் கேற்ற சொல்தச்சு செய்கிறான்.

காலங் காலமாய்க் கடவுளை வணங்கியும்
வயிற்றிக் கிலாது வறுமையில் வாழ்பவர்
வாழ்க்கையின் வசதி சிறுதும் இலாதவர்
தொழில்இல் லாதவர், தொழில் செய்தாலும்
மனித உழைப்பே மலிவாய்ப் போய்விடும்;
நோய்நொடி நூறு நொறுக்கித் தின்றிடும்;
இத்தனை பேரும் கடவுளை நம்பினோர்
ஆனால் அவர்கள் கைவிடப் பட்டார்.

கடவுள் தம்மைக் கைவிடுவ தேனோ?
கும்பிட்டுக் கடவுளை நம்பினோர் தமை
உண்ண உணவின்றி உடுக்க உரையின்றி
இருக்க இடமின்றி விரட்டுகின்றதே,
நம்மைத் தாழ்த்தி நசுக்கி ஒடுக்கிச்
செம்மையாய்ப் பிழிந்து சுரண்டும் செல்வர்க்கு
மட்டும் கடவுள் வாரி வழங்குதோ?
இருப்பவன் இல்லான் என்னும் இரண்டினம்
தெருத்தொறும் ஊர்தொறும் வெறுப்பை வளர்த்து
நாட்டினில் மக்களை நலிவிக் கின்றதே.
ஏழையை அழித்துச் செல்வரை வளர்க்கும்
ஓர வஞ்சனை உள்ளதோ கடவுட்கு?

ஒருநாள் ஓர்உந்து வண்டி முரண்டி
தெருநடைப்பாதை சேர்ந்த கடவுட்
கோயிலில் மோதிட குமைந்தது கடவுள்,
வண்டியில் வந்த ஒருபது மக்கள்
திண்டி வனத்துத் தெருவில் இறந்தனர்.
மற்றவர்க்குக் கைகால் மண்டையிலே அடி.

தன்னைக் காக்கத் தெரியாக் கடவுள்
தன்னை நம்பிய மக்களைக் காத்ததா!
இன்றைய அரசியல் எத்தர் களைப்போல்
அன்றைய ஆரிய எத்தர்கள் தந்த
பிணக்கேற் படுத்தும் கடவுளைக்
கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே.





( 25 )





( 30 ) 





( 35 )




( 40 )




( 45 )





( 50 )






( 55 )


ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும்

  இரோஷிமா நாகசாகி
  எனும் இரு ஊரில் வைய
  விரோதிகள் வீசினாராம்
  வெடி குண்டை; எரிமலைத் தீ
  சரேலெனக் கவிழ்ந்ததைப்போல்
  சாவில்பல் லாயிரம் பேர்
  ஒரே விஷப் புகை நெருப்பால்
  உருவிலாது அழிந்தாராமே.

  நானிலம் அனைத்தும் உள்ள
  நச்சும்பாம் பனைத்தும் கூட்டி
  வானில்ஒர் அணுக்குண்டாக
  வன்பகை நெருப் பழுத்தித்
  தான்பொழிந் தானோ பாவி?
  அமெரிக்கக் கொலைப் படைக்குத்
  தான்தோன்றி தனத்துக்கொல்லாம்
  ஜப்பானில் தானா ஆட்டம்?

  இன்னும் ஒர் நூறாண்டுக்கும்
  இரண்டூரின் சுற்றுப் பக்கம்
  ஒன்றுமே முளையா தாமே
  வாழ்தலும் ஒண்ணா தாமே.
  ஒன்றுகேள், முதாலளித்துவம்
  உலகினை அழிக்கும் முன்னம்
  நன்றுநாம் செய்தல் எல்லாம்
  நாமதை ஒழித்தல் வேண்டும்.

  பராபரக் கண்ணி பாடி
  பனிமலை குமரி எல்லைத்
  திராவிட நாட்டில் மேனாள்
  தீயெனப் பாய்ந்த பார்ப்பார்
  ஒரேஇனம் என்று சொல்லும்
  அமெரிக்கர் உருவினுக்குள்
  இரோஷிமா நாக சாகி
  எரிந்ததே; இடிந்ததுள்ளம்.

  வந்தேறி கண்டம் தோறும்
  வாயினில் விழுங்கிக் கொல்லும்
  அந்தோபாழ் அழிவுக் கஞ்சா
  அமெரிக்கச் சுரண்டல் காரர்
  நொந்தே நாம் அழிவதற்குள்
  நொறுக்கிட வேண்டும் அன்றோ!
  செந்தேனைப் பொழிவதைப் போல்
  செந்நீரைப் பொழிவோம்; வெல்வோம்.

  ஒருசிலர் அதிகாரத்தின்
  வல்லர சுரிமை காக்க   உலகமே தீக்கா டாக்கி
  உயிர்க்குலம் அழிக்கும் ஈனர்
  பலத்தினை ஒடுக்க வேண்டும்;
  வையப் பாராளு மன்றம்
  புலம்பலில் பயனே இல்லை
  பொசுக்குக போர் மூலத்தை!

  உலகநா டெங்கும் உள்ள
  உழைப் பாளர்க்கென் விண்ணப்பம்
  உலகத்தில் அமைதி வேண்டின்
  அனைவரும் ஒரு சிலர்க்காய்ப்
  பலம்தரும் படையில் சேரப்
  படாதுநாம் விலக வேண்டும்
  இலகுவில் வையம் போரின்
  இழிவெண்ணம் மடிந்து போகும்!

  ஜப்பானில் வீழ்ந்த குண்டு
  சர்வாதி கார ஆட்டம்
  இப்பாரை இனிக் கலக்கி
  இனி வருங்கால மின்றி
  தப்பாது செயினும் செய்யும்,
  தறுதலை முவலாளித்வம்
  எப்போதும் நமைவிடாது
  செய்வன இன்றே செய்க.



( 60 )




( 65 )





( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )



( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )

வியத்நாமிலிருந்து விலகுக எச்சரிக்கை

   வையப்போர் முடிந்ததென நினைக்கும் நாளில்
   வல்லரசின் திமிரொடுங்க வில்லை! கீழே
   கைவைத்த பிரான்சுநாட் டடியிருந்து
   கடுமைமிகு விடுதலைப்போர் வியத்நாம் கண்டு

   மெய்யுயர்த்தி மேம்பாட்டிற் குழைக்கும் வேளை
   வீடிழந்தார் விளைவிழந்தார் உறவிழந்தார்
   கையுழைப்பால் தலைதூக்க நினைக்கும் காலை
   கயமைமிகும் அமெரிக்கா கால்நீட்டிற்றே.

   மனவலிமை குன்றாத வியத்நாம் மக்கள்
   மறுவாழ்வில் ஊடுருவும் முதலாளித்துவ
   மனப்போக்கை முறியடித்தல் உலக நாட்டு
   மன்றத்தின் முதற்கடமை ஆகும், ஒவ்வோர்

   இனமக்கள் வாழ்நாடும் அவ்வவர்க்கே
   எனும்உணர்வு விழிப்புணர்ச்சி இயற்க்கை; எந்த
   இனமற்ற அமெரிக்க வெறிநாய்கட்கே
   இனமேது? ஏதுமொழி எச்சிற் சோறே.

   அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள்
   ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை;
   திமிருற்ற ஏகாதி பத்தியத்தைத்
   திசைதோறும் எதிர்க்கின்றார்; அவர் நாட்டாரே

   குமுறுகிறார் கோணல்மன அமெரிக்காவே
   குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்
   இமயத்தின் எல்லையிலே காலைநீட்டும்
   சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு!

   சான்றோர்கள் உன்முகத்தில் காரி துப்பும்
   சாய்க்கடையாய் அமெரிக்க அரசியல்சீர்
   தான்றோன்றித் தனமாக நடப்பதெல்லாம்
   தரங்கெட்டுப் போவதையே காட்டும்; நாட்டில்

   ஊன்றிஎழும் நிறவெறிப்போர் களையவில்லை;
   உலகமக்கள் உறவென்னும் அன்பும் இல்லை;
   ஈன்றவரும் வெறுக்கும்வண்ணம், வியத்நாம் வீரம்
   இடுப்பொடித்துப் போடும்உனை எச்சரிக்கை!




( 125 )





( 130 )





( 135 )





( 140 )





( 145 )






( 150 )


பொன்னி

பொன்னியின் அழகிய பொங்கற் புதுமலர்
என்னுள்ளத்தில் இன்பம் பெய்ததே.
இராத தொன்றைத் திராவிடர் பால்
இருப்பதாக்குவ திந்தப் பதிப்பாம்!

உயர் கருத்து நல்கும் ஒவியம் கண்டேன்
அயர்வகற்றும் அறிஞர் கட்டுரைகள்!
கண்டேன்! கவிதைக் கனிகள் கண்டேன்!

எங்கணும் பொன்னி எவர்நி னைவிலும்
பொன்னி என்னும் புகழ்க்குக் காரணம்
தமிழ்நாட் டன்பும், தகுதிரா விடரின்
இழிவை எதிர்க்கும் எண்ணமும், கலையில்
ஆர்வமும் தெளிந்த அறிவும் உடைய
பெரியண்ணன் முருகு பெரிதுழைப் பாகும்.
அவர்கள் நீடு வாழ்க!
சுவைதரு பொன்னிச் சுவடி வாழியவே!


( 155 )





( 160 )





( 165 )


மன்றம்

மன்றம் என்பதோர் மாத இதழை
இன்றெம் தோழர் எழில்நெடுஞ்செழியனார்
எழுதி வெளியிட இசைந்ததைப் போற்றுதும்
எழுது புலமை முழுதுளார் ஆதலின்.

அன்னார் கருத்தை அமுதாக் கொள்ளுதும்
பன்மொழிப் புலமை படைத்தார் ஆதலின்.

மன்றம் நன்று வாழ்க
என்றும்நெடுஞ் செழியனார் இனிது வாழியவே!


( 170 )






( 175 )

நிலவு

நிலவின் பொங்கல் மலர் ஒன்று வந்தது
பலரின் கட்டுரை, பலரின் கவிதைகள்
அழகு செய்வன அறிவை வளர்ப்பன
ஏடெழுதும் தமிழ் எழுத்தா ளர்க்குள்
பீடெலாம் கணேசன் பெற்றிருக் கின்றான்;
அன்னோன் செந்தமிழ் ஆய்ந்தவன்; நிலவு
தன்னை நடாத்தத் தகுதிறன் உடையான்;
தோழன் கணேசன் வாழ்க!
வாழ்க நிலவு திராவிடம் வாழ்கவே.




( 180 )




( 185 )

கார்ல் மார்க்சு

 கார்ல்மார்க்ஸ் என்னும் கவினுறு நூலை
அழகிய முறையில் அளித்தோன் சதாசிவம்
'இன்ப வாழ்வுப் பதிப்பகம்' இதனை
நன்று வெளியிட்டு நமக்குத வியது.
அனைவரும் இதனை ஆதரிக்க
மனவிருள் அதனை மாற்றுதற் கென்றே.





( 190 )

ஈரோட்டுத் தாத்தா கொய்யாக் காதல்

 ஈரோட்டுத் தாத்தா
   எனும் திராவிடர்க்கழகத்
தேரோட்டுவார் பற்றிச்
   செய்யுள்நூல் சீரோட்டத்
தோதிருக்கச் செய்தளித்தான்
   நாச்சியப்பத் தோழன்அதை
ஆதரிக்க ஐயமில்லை நாடு.
   மேலும்கொய் யாக்காதல்
விண்டான் அவனே மேன்
   மேலுமது வெல்க இனிது.




( 195 )




( 200 )

போர் வாள்

 போர்வாள் நமக்களித்தோன்
   பொங்கல் மலரும் கொடுத்தான்
பார்மேல் திராவிடர் நாம்
   பாய்ந்து பகை எதிர்ப்போம்
தாரணிவோம் வெற்றித்
   தனிமுரசம் ஆர்த்திடுவோம்
வார்புகழ்கொள் மாணிக்க
   வாசனார் வாழியவே!

பொங்கல் மலரில் புதிய கருத்துக்கள்
செங்கரும்பு போலும் தெவிட்டாத பாட்டுக்கள்
அங்கங்கிருந்த அழகுசெயும் ஓவியங்கள்
இங்கு நமக்கின்பம் விளைத்தன வாழியவே!




( 205 )





( 210 )


தனித்தமிழ்க் கிளர்ச்சி

 தனித்தமிழ்க் கிளர்ச்சி எனுமொரு நூலைத்
   தனித்தமிழ்ச் செய்யுளால் உள்ளம்
இனித்திடத் தந்தார் புலவர்சண் முகனார்
   இத்தமிழ் நாட்டினில் இதனில்
மனைக்கொரு படிஎன வாங்குக! நாளும்
   மணிக்கொரு முறைஅதைப் படிக்க!
தினைத்துனை உழைப்பில் பனைத்துனை பயனைச்
   சேர்க்கும்இந் நூல்எனல் மெய்யே!


( 215 )




( 220 )

இல்லப் பெயர் அகரவரிசை

கனிதமிழ் பாதுகாப்புக் கழகத்தார்
   வெளியிட்டுள்ள
இனிதான இல்லப்பேர் அகரவரி
   சைநூல் கண்டேன்
தனதுபேர்க் கொத்தவாறு நூலில்லை
   சமையப் பேர்கள்
நனிஉள, இதனால் நாட்டுமக்கட்கு
   நன்மை இல்லை.




( 225 )



இராவணன்

பகுத்தறிவுக் கொத்தபடி
   இராவணநாடகமதனைப்
      பகர்ந்தான் கண்டீர் !

மிகுத்த அழகான தமிழ்
   மிடுக்குநடை யாற்கரந்தை
      வேலன்! அன்னோன்,

தொகுத்து புகழ் சிறிதன்று
   அளித்த நலம் சிறிதன்று
      தூய தமிழ்க்கும்

புகுத்தரிய புகழ்தனையும்
   புகுத்தி விட்டான் திராவிடர்கள்
      புகன்றார் நன்றி.

பழம்பெரிய திராவிடத்தைப்
   பறித்தார்வேர் பறிப்பதற்கோர்
      வழிதானுண்டு

வழங்கிதிகா சப்பெயரால்
   திராவிடர் சீர்மறுத்தார் சொல்
      மறுக்கும் வண்ணம்

முழங்குதல் வேண்டும் பண்டைத்
   திராவிடர் தம்பழம்பெருமை
      புதிய நூலில்,

எழுந்த உணர்வாற் புதிய
   இராவணன் தந்தான் வேலன்
      என்றும் வாழி!

( 230 )





( 235 )






( 240 )





( 245 )





( 250 )



போர்வாள்

கதை அமைப்பில் கடல்அலை போன்ற
தொடர்பும், விறு விறுப்பும் தோன்றுதல் கண்டேன்.
கதை உறுப்பினர் பேச்செலாம் எனில்,
புதிய இலக்கியப் பூக்காடு என்னலாம்.
தேனீக் கூடுபோல் நானில மக்களின்
உளந்தொறும் புகுந்தே உருவழித்து வரும்
மடமை வழக்கம், வஞ்சம் இவைகளை
இடந்தொறும் தேடி எடுத்துக் காட்டியும்,
கடிந்தும், உண்மை இதுவெனக் கழறியும்
நல்லதோர் உலகுக்கு மக்களை நடத்திச்
செல்லுகின்றார் தோழர் சிற்றரசு
போர்வாள் இயற்றிய புலமை ஒன்றினால்!
சிற்றரசு மேலும் திராவிடர்க்கு
நற்றமிழ் நாடகம் நல்குக வாழியே!


( 255 )




( 260 )




( 265 )

நவீனம்

நவீனம் என்னும் நல்லிதழ் பார்த்தேன்
சுவையுறு கருத்துள தூய கதைகளும்
அறிஞர் கட்டுரைகளும் அழகுற
நிறைந்தன அதனில் நீடு வாழியவே !



( 270 )

பலசரக்கு மூட்டை

பலசரக்கு மூட்டை எனக் குத்தூசித் தோழர்
விடுதலையிற் பன்னாளாய் வரைந்தவற்றை எல்லாம்
இலகுதனிச் சுவடி எனஅச்சி யற்றி யுள்ளார்
எல்லாரும் வாங்கிடுக இன்ப மிகக் கொள்க.
விலை சிறிதும் பெறுதலிலாப் பார்ப்பனரின் மூட்டை
வெறும்பதரே என்பதனைக் குத்திவெளிப் படுத்திச்
சலசலப்புக் கஞ்சாதீர் திராவிடரே என்று
சாற்று மிதைப் படிக்காமல் தள்ளிடுவார் உண்டோ?




( 275 )



பகுத்தறிவு இயக்கத்தின் பழமை

பகுத்தறி வியக்கத்தின் பழமை என்னும்
பனுவலினைச் சீவபந்து சீபால் தந்தே
மிகுந்தநலம் விளைத்துள்ளார் திராவிடர்க்கே!
மேனாளில் திரவிடரின் மேன்மை, சீர்த்தி
வகுக்கரிய நுண்ணறிவு வாழ்வின் நேர்மை
இவற்றையெலாம் பழநூலின் வாயிலாகத்
தொகுத் தளித்த அறிஞர்க்கு நன்றி! சீபால்
தூயவர்தாம் பல்லாண்டு வாழி நன்றே

( 280 )




( 285 )

ராஜி நாமா

மிக நன்று மிக நன்று ராஜி நாமா
மிக்க இனி தான நடை! கதையமைப்பால்
தகும் ராச வேல் ''அலுவலகப்'' படத்தைத்
தருகின்றார் நாட கத்து விருந்தினர்க்கு
நகைச் சுவையாம் பொரிக் கறிக ளோடு; நெகூசம்
நடுக்கமுறும் இரக்கத்தை ஊட்டுகின்றார்   
அகம்தெளித்த எழுத் தாளர் இராச வேலர்
அத்தமிழ் நாட்டார் நன்றிக் குரியாரானார்.



( 290 )




( 295 )

ஆணைஏற்போம்

''ஆணைஏற்போம்'' ஆகுமோர் அரசியல்
பாடல் நூல் தன்னைப் பகர்ந்தார் தோழர்
நாராயணசாமி! ஊராள வந்த
காங்கிரஸ் ஆட்சியில் தாங்குயிர் நீத்த
தோழர்க்கு இகிரக்கம் சொல்லும் வகையால்
மக்களை எழுச்சி தன்னில்
உய்க்கும் கருத்தால் உற்து இந்நூலே.





( 300 )