வேங்கையே எழுக!
நாட்டுக்கு நான்
|
தமிழுக்குப் பிள்ளை -- அவன்
தளை நீக்கும் மறவன்
நமதன்பு நாட்டை -- இனி
நான் காக்கக் கடவேன்.
அமிழ் தொக்கும் தமிழர் -- நல்
அறம் காக்கும் மறவர்
தமை ஈன்ற நாடு -- தமிழ்த்
சான்றோரின் வீடே.
சாவைத் தொலைத்தேன் -- தமிழ்த்
தாய்க்கு வாழ் கின்றேன்
பா ஒன்றி னாலே -- தமிழ்ப்
பண்பாடு காப்பேன்.
நாவை அசைத்தால் -- ஒரு
நானூறி லக்கம்
மூவேந்தர் பேரர் -- பகை
முற்றும் தொலைப்பார்.
ஞாலம் முழங்கும் -- தமிழ்
நான் மறை நன்றே
காலந் திரும்பும் -- தெற்குக்
கடலும் ஒதுங்கும்
சோலைகள் காண்பேன் -- அங்குத்
தென்னகர் காண்பேன்
நாலு திசைகள் -- தமிழ்
நாடென் றடங்கும்
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
|
திராவிட நாட்டுக் கொடி வணக்கம்
|
வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்!
நானில மேல்அதன் மாண்பினைக் காண்பதில்
நாம் நன்றுசேர இணங்குவோம்.
ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் -- அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லவோ?
விண்ணிடை ஏறிய எங்கள் மணிக்கொடி
வெல்க வெல்க வெல்க வெல்கவே!
மண்ணில் உயர்ந்த திராவிட நாட்டினர்
மாட்சி மணிக்கொடி வெல்கவே!
திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே!
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே!
|
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
|
எடுப்பு
சென்னை நகருக்காகத் தீராது சண்டையிட்டீர்
இன்பத் திராவிடரே -- நீவிர் உலகில்
எல்லோரும் என் மைந்தரே.
உடன் எடுப்பு
என்னதென்ன தென்பீர் இனத்திற் பகைகொள்வீர்
தென்தமிழ்க் கிள்ளையே, என்தெலுங்குப் பிள்ளையே.
(சென்னை)
அடிகள்
என்னைத் தன்னடிமை என்றான் -- என்னருமக்கள்
யாரும் தன்னடிமை என்றான்.
சென்னை நகருள்ளிட்ட திராவிட மாநிலம்
தன்னுடைமை என்றானே வடநாட்டுப் பகைவோனே.
(சென்னை)
முற்றத்தை மூத்தவனும் -- இளையனான
முதிரன்பில் வாய்த்தவனும்
பெற்றுக் கொள்வதில் சண்டை உற்று நலிவதுண்டோ?
பெருவீட்டை மீட்பதொன்றே இருவர்க்கும் கடனன்றோ?
(சென்னை)
பெயரினால் வேறுபட்டீர் -- மக்களே நீங்கள்
பிறப்பினால் ஒன்று பட்டீர்
அயர்வினால் அனைவரும் அயலானுக் காட்பட்டீர்
அறமறந்தீர், உங்கள் திறமறந்தீர், நாளும்
(சென்னை)
|
( 45 )
( 50 )
( 55 )
|
தமிழ்நாட்டைத்
தமிழர்களைத்
தனியாக்கப் போராங்கோ
உமிஇடிக்கப் போராங்கோ நல்ல
உரல்உடைக்கப் போராங்கோ -- நம்ப (தமிழ்)
தமிழ் பேசும் மாகாணம்
தனிஎன்று சொன்னாங்கோ
தெலுங்குபேசும் அண்டைவீட்டைச்
சண்டை பிடிக்கச் சொன்னாங்கோ
நமது மலையாளிகளை
நாம் பகைக்கச் சொன்னாங்கோ
நலமேதான் பண்ணி நமைக்
கலகஞ் செய்யச் சொன்னாங்க (தமிழ்)
தெலுங்கு நம்ம தெருவை விட்டு,
தெலுங்கு நாடு போகணும்,
மலையாளத்தார் இங்கிருந்தால்
மானம் விட்டுச் சாகணும்,
கன்னடத்தார் கன்னடநா
டெங்கே என்று தேடணும்,
களிதுளுவர் முகவரியைக்
கண்டுபிடிக்க ஓட ணும் (தமிழ்)
தமிழ் தெலுங்கு மலையாளம்
கன்னடரும் துளுவரும்
தனித்தனியாய்ப் பண்ணாங்கோ
இது நல்லதே இண்ணாங்கோ.
நமது சேரன் மலையாளி
என்று தள்ளி விட்டாங்கோ
நாலில் ஒரு பங்கை மட்டும்
தமிழ் நாடாக் கிட்டாங்கோ (தமிழ்)
கன்னடம் தெலுங்கு துளு
நாடுகாத்து வந்தாங்க
கண்ட அந்தச் சோழ பாண்டி
மன்னரையும் நொந்தாங்கோ
மன்னு தமிழ் நூலையெல்லாம்
மறக்கும்படி சொன்னாங்கோ
வரிப்புலி, வில், கயற்கொடிகள்
மாற்றங்கொள்ள வச்சாங்கோ (தமிழ்)
சேரன்நிலம் தமிழ்நிலமாய்ச் செப்பும் நூலைக் சொன்னாங்கோ
தெலுங்குநிலம் தமிழ்நிலமே
இல்லை என்று பண்ணாங்கோ
ஊரில் இனித் திராவிடநாடு
உருப்படுமா இண்ணாங்கோ;
ஒவ்வொன்றுக்கும் பகைமூட்டி
ஒழிப்பம் என்று சொன்னாங்கோ (தமிழ்)
தெலுங்கு மலையாள மெல்லாம்
திராவிட நாடில்லையாம்
சேர்துளுவம் கன்னடமும்
திராவிட நாடில்லையாம்
இலகு திராவிடம் பிரிக்க
வந்தால் அடிப்பாங்களாம்
எழுந்து வரும் திராவிடரை
விழுந்து கடிப்பாங்களாம்! (தமிழ்)
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
|
திராவிட நாட்டின் பெயர்
நான் "மூவேந்தர் நாடெ."ன நவில்வதும்
"தென் மறவர் நாடெ"ன்று செப்பலும்
"பழந்தமிழ் நாடெ"னப் பகர்வதும், இந்நாள்
வழங்கு "திராவிடர் நாடெ"ன வரைவதும்,
ஒன்றே! அதுதான், தொன்று தொட்டு
வென்று புகழோங்கு நம் அன்னை நாடு!
திராவிடம் தமிழ்மொழி
திராவிடம் என்று செப்பிய தேன் எனில்
"திருத்தமிழம எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்.
திரமிளம், பிறகு திராவிடம் ஆனது.
வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்
வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே!
அதுபோல்,
திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால்
இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்?
மூவேந்தர்:
மூவேந்தரென மொழியப் பெறுவோ
பாவேந்தர் புகழ் கயற்கொடிப் பாண்டியன்,
போரில் நிகரிலாப் புலிக்கொடிச் சோழன்
சீருறு விற்கொடிச் சேரன் ஆவார்,
இம் மூவேந்தர் இனத்தவர் தமிழர்
இம் மூவேந்தர் செம்மொழி தமிழே!
மொழித் திரியினால் பெயர் மாற்றம்
நெடிய இத் தமிழகம் இடைக்காலத்தில்
தமிழ்நா டாந்திரம், தனி ஒரு கேரளம்
அமையும் துளுவம், கன்னடம் ஆகப்
பிரிவுற்றது தமிழ்ப் பேச்சின் திரிபினால்!
கோழி என்று கூறலே தமிழாம்
கோடி என்று கூறல் தெலுங்காம்
கோளி என்றி கூறல் கேரளமாம்
கோலி என்றி கூறல் கன்னடமாம்
கோழி என்று கூறல் துளுவமாம்
தமிழ் மொழி இவ்வாறு தான்திரிந்திடினும்
அனைத்தும் தமிழே ஆகும் அன்றிப்
பிறமொழி என்று பேசவும் படுமோ?
அனைத்தும் பழந்தமிழ் நாடே கன்னட நாடெனக் கவின்மலையாள
நன்னர் நாடென ஆந்திர நாடெனப்
பன்னும் துளுவநா டெனப்பற் பலபெயர்
பகரினும் அனைத்தும் பழந்தமிழ் நாடே
அன்றி அவைதாம் அயல் நாடுகளா?
குள்ள நோக்கம் :
இவையெலாம் தமிழகம் இல்லை எனவும்
இவைகள் ஒழித்த இடுக்கு நிலமே
தமிழ் நாடெனவும், அத் தமிழ்நாடுதனை
அமைவுறப் பிரி்த்தே அமைப்பீர் எனவும்
விள்ளுகின்றார் சிலர் விரித்த நோக்கிலார்.
நீங்கள் சொல்வீர்களா?
தெள்ளு தமிழாம் திரைக்கடல் தன்னை
உள்ளும் புறமும் ஆய்ந்துணர்ந்த தமிழரே
தமிழைக் காத்த, நம்தமிழ் இலக்கியமாம
அமுதைத் தன் வரலாற்றினால் உயர்த்திய
தமிழ்ச் சேனைத் தமிழன் என்று
செப்பவும் மறுப்பிரோ? சேரன் நாட்டினை
நம்தமிழ் நாடென நவில மறுப்பிரோ?
விற்கொடி உம்மினும் வேறா சொல்வீர்?
கன்னடம் துளுவம் கவின் ஆந்திரம் இவை
பன்னருஞ் சோழன், பாண்டியன் ஆண்ட
வண்டமிழ் நாடா? வடவர் நாடா?
கயலோ புலியோ கவினுறு தமிழர்க்கு
அயலோ பகைவர் அயலெனக் கூறினும்?
திராவிட நாட்டை முழுதும் மீட்போம்
பன்னூற்றாண்டு முதல் இந்நாள் மட்டும்
வென்றார் இல்லை என்றும், வெல்ல
நின்றார் இல்லை என்றும், நிகழ்வதும்
அருமைத் திராவிடப் பெரிய நாட்டைப்
பழந்தமிழகத்தைப், பார் அறிந்ததென்
மறவர் வையத்தை, இறவாப் புகழ்கொள்
மூவேந்தர் நாட்டை முழுவதும் மீட்போம்.
தென்தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம், துளு
என்னுமிவ் வைந்தில் ஒன்றுதான் தமிழகம்
என்று நான்கையும் எதிர்ப்பதா? எதிர்ப்பின
நம்முடன், நம்மூர் நம்தெரு வதனில்
தென்னண்டை வீட்டுத் தெலுங்கர் நிலை ஏது?
வடவண்டை வீட்டு மலையாளிகளைப்
பகைப்பதா? எதிர்ப்பாங்கு வீட்டுக்
கன்னடத்தாரைக் கடிந்து கொள்வதா?
அல்ல திவர்களை அவரவர் நாட்டுக்குத்
குடியேற்றுவதா? குடியேற்றிய பின்
இங்கெத்தனைபேர் தமிழர் இருப்பார்?
பெயர் மாறின் பொருள் மாறுமோ!
செந்தமிழ், கேரள, தெலுங்கு, கன்னடம், துளு
ஐந்து வகையில் அழைக்கப் பெறினும்
மாந்தர் வகையால் திராவிட மக்கள்நாம்!
மீட்சி
தென்குமரி வங்கம் திரைக்கடல் முப்பாங்கு
மன்னிய திராவிட வையத் துரிமையை
ஒருசிறி திழக்க ஒப்போம்; பெருநாட்டுப்
பெருந்தொகைப் பெரும்புகழ்ப் பெரும்பண்புடையார் நாம்
பிரிவோ மில்லை, பிரிந்தால் வாழ்வில்லை
பிரித்தாள எண்ணும் பிறர்க்கு வடிவில்லை,
கலைஒன்று, திராவிடர் கண்ட நாகரிக நிறை ஒன்று, தாழைமுள் நிகர் நெல்லரிசிச் சோற்
றுணவொன்று! நடையுடை ஒன்று நமக்கெலாம்.
உறுதி ஒன்று திராவிட
மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!
|
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
|
செந்தமிழை வளமாக்க உதவ வேண்டும்
தீ இந்தித் திணிப்பைஇனி மாற்ற வேண்டும்
முந்தவே கட்டாயக் கல்வி வேண்டும்
முற்றிவரும் சாதிவெறி ஒழிய வேண்டும்
இந்தநிலை யாங்களெலாம் எய்திவிட்டால்
எங்கள் வாழ்வுக்குவே றென்ன வேண்டும்,
இந்தியினை எதிர்க்கின்றோம் அதற்குப் பேர் தான்
இந்நாட்டுப் பிரிவினைக் கோரிக் கையாகும்.
செந்தமிழ் நாட்டின் மீதில் அள்ளி அள்ளிச்
செழுந்தீயை வீசுகின்ற வட புலத்தை
எந்தாயே என்றுநாம் அழைக்க மாட்டோம்
எள்ளளவு மனச்சான்றும் வடக்கர்க் கில்லை
முந்துங்கள் தமிழர்களே தமிழன் னைக்கு
முட்டுக் கட்டைகளாக அமைய வேண்டா
ஐந்தாறு கட்சிகளும் ஒன்று சேர்க்க
ஆவரும் இந்திவிட்டு மீளலாகும்.
|
( 210 )
( 215 )
( 220 )
|
வாழ்க வாழ்க வாழ்கவே
வளமது பெருக திராவிட நாடு! வாழ்க!
சூழ்தரு பரிதியின் ஒளிபடு குன்றம்
தோற்றம் பாடுபற் கூற்றைச் சாடுநர்
வீழ்புனல் அருவி ஆடிடும் மகளிர்
வேண்டிய நலமும் ஈண்டிய நாடு வாழ்க!
கத்தும் கடல்தரு முத்துக் குவியல்,
கமழும் கூந்தற் றமிழ்ப் பெண்கள்,
தித்தித் திடுமொழி மாதர் உலகைத்
தேற்றும் அறமேசெய் தமிழ் நாடு வாழ்க!
நளிர்புனல் நன்செய் விளைவுறு செந்நெல்
நறுநெய் தயிரோடு நிறைபடு சோறும்.
எளிமையை நீக்கும் ஈவோர் கூட்டம்,
எய்திய நாடு திராவிட நாடு வாழ்க!
பாடும் பறவை, விடுதலை விலங்கு,
கல்வகை மலர்கள் முல்லைக் கொடிகள்
காடும் கமழக் கை கோத்தாடும்
காதலர் அன்பு கனிவுறு நாடு வாழ்க!
தமிழும் தமிழ்தரு துளுவும் தெலுங்கும்
தகுமலை யாளம் கன்னட முதலா
அமைவுறு நாட்டைத் திராவிடம் என்றே
அறிஞர் போற்றும் அன்னை நாடு. வாழ்க!
|
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
|
சாதி ஒழிக எனக்கூவும் தாய்க் கோழி
தானே பற்றுக இளந்தமிழ்ப் புள்ளினம் (சாதி)
ஆதிப் பெருமை பெரியாரை அல்லால்
தமிழருக் களிப்பவர் வேறெவர் உள்ளார்? (சாதி)
ஏதடா கட்சிகள் இங்கே
எவ்வெவர் மூச்சுக்கும் மூச்சாய்
போதெல்லாம் தொண்டு செய்கின்றார்
போம்வழி போதலே அல்லாமல் வேறு
புகலிடம் தமிழருக் கெங்குண்டு தேறு -- (சாதி)
தீயபார்ப் புக்குப் படிந்த
தேவடி யாள்மக்கள் போலே
ஆயாது தீதுநெறிச் சென்றாய்
அம்மியா காவேரி ஆற்றுக்குத் தெப்பம்?
பெரியார் அடிச்சுவடு நன்மை பயக்கும். (சாதி)
நாய்குலைத் தாநத்தம் பாழாய்
நன்றறியாத உன்னால் என்ஆம்!
தூய்குரல் எவரும்ஒன் றென்று
தோன்றிற்றுக் கேள்அது நாம்பெற்ற செல்வம்
பெரியார் தொடங்கிய போர்ஒன்றே வெல்லும்! (சாதி)
|
( 250 )
( 255 )
( 260 )
|
கூவாயோ கருங்குயிலே
யாவரும் ஒன்றென்றே -- கூவாயோ?
ஏவலர் இந்தியர்கள் இரண்டாம் தொகுதி என்றார்
இக்குறை நீங்கிற்றென்றே இனிதாய் நன்றே (கூவாயோ)
குவலயத்தில் சமத்துவநிலை காட்டவந்த
பிரஞ்சுக் குடிஅரசின் நிழலில்,
இவனுயர்ந்தோன் இவன்தாழ்ந்தோன் என்றுரைத்தால்
யார்சகிப்பார் அந்த அழலை?
கவிந்திருக்கும் ஒரு குடைக்கீழ் உள்ளவரில்
சிலர்க்குநிழல்; சிலர்க்குவெயிலோ?
குவிந்த பொருளோ விஷயமோ சமமாக
அடையாத தெவ்வகையிலோ?
மேலவர் என்றோர் தொகுதி
மீதிப்பெயர்க் கோர்தொகுதி!
மேன்மைக் குடியரசில் இதுவோ கதி? (கூவாயோ)
|
( 265 )
( 270 )
( 275 )
|
சாதி ஒழிய வேண்டும் என்பதும்
தமிழக விடுதலை வேண்டும் என்பதும்
குள்ளக் கருத்தா? வெள்ளம் போன்ற
தமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ?
ஒழியாச் சாதி ஒழிய வேண்டும்
தமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும்
இன்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின்
கொள்கை அன்றோ? இந்தக் கொள்கை
வெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும்
அல்லல் தீரும் இழிவும் அகலும்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
தமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்;
பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்!
அரிய இவற்றை அவரை அல்லால்
எவரால் இங்கே சொல்ல முடிந்தது?
எவர் தாம் இதுவரை சொல்ல லானார்?
சொன்னார் பெரியார் என்பது மட்டுமா?
செய்தார் பெரியார் செய்வார் பெரியார்
என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா?
ஆயிரம் ஆண்டுகள் அகன்றன! வரலாறு
சாகவில்லை இருக்கக் கண்டோம்.
அவ்வர லாற்றில் ஓர் தமிழர் தலைவனைத்
கண்டதுண்டோ? காதுதான் கேட்டதா?
பெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை!
பெற்றோம் இன்றுதான் பெரியார் தம்மை!
அன்புடையீரே அறிவுடைத் தமிழரே
பெரியார் எண்பது வயதும் பெற்றார்
இருக்கும் போதே விடுதலை எய்தலாம்
கட்சி வேண்டாம் கலகம் வேண்டாம்
எப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே!
எல்லா மக்களும் இரும்புக் குண்டுபோல்
ஒன்று படுதல் வேண்டும் இன்றே!
நன்று பெறுதல் வேண்டும் அனைவரும்!
திராவிடர் கழகம் சிறிய தன்றே,
அஃது பெரியார்க் குரிய தன்றே,
சாற்றுவேன்: அஃது தமிழரின் உடைமை!
பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்
அங்கி ருந்து கிளம்பும்! அரும்போர் நிறுவனம்!
பொதுப்போர்! புதுப்போர்! எழுக எழுக!
புதியதோர் தமிழ் உலகம்
இதோ! இதோ! வெல்க எழிற்றமிழ் நாடே !
|
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
|
பிண்ணாக்கு நிறம்! பிளவிலாக் குளம்புகள்
வெண்முகம்! நீள்காது! மிக மிக அழகு!
தெருவிற் புகுந்து தெருவில்என் வீட்டின்
அருகில் வந்ததும் அருமை! அருமை!
வீட்டினுட் புகுந்தது, காட்டுத்தழை என்று
சுவடிகள் துணிகளை மென்றுதின்றதும்
சொல்லொணாப் புதுமை! சொல்லொணாப் புதுமை.
வாய்தி றந்து வண்ணம் பாடித்
தூய்மையைத் துடைத்ததும் மெச்சத் தக்கது!
துணிவுடன் அடுக்களைச் சோற்றுப் பானையை
உருட்டி முழுதும் இனிதாய் உண்டதைப்
பார்க்கப் பார்க்கப் பார்ப்பார் கண்கள்
மகிழ்ச்சி மத்தாப் பாக விளங்கின!
தன்னுளத் தாங்காது வீட்டின் தலைவன்
வாய்பெருத்த வடக்குக் கழுதையே
வெளியே போநீ என்று விளம்பினான்.
இதுபிரிவினைமனப் பான்மை என்று
கத்துகின்றதே கழுதை
கத்துகின்றதே கத்து கின்றதே!
|
( 325 )
( 330 )
( 335 )
|
கண்ணில் இடறி மண்ணைத் தூவும்
காட்டு நரி போலே -- மக்கள்
கருத்தி லெல்லாம் பத்த வச்சலர்
வருத்தம் தூவ லாலே -- பார்
கலக லத்தது கோட்டை
-- ஊர்
காட்டு கின்றது சூட்டை -- அது
நலிய வைத்தது நாட்டை -- நம்
நல்லகாம ராசர் ஆட்சியின்
நடுவில் வந்தது பெரிய ஓட்டை!
திண்ணைத் தூங்கிப் பார்ப்பா -- னவன்
திரு நீற்றை அள்ளி -- நம்
நண் பமைச்சி ராம சாமி
மேல் எறிந்தான் துள்ளி -- அவன்
நடத்தை யெல்லாம் தப்பே -- தமிழ்
நாடெல்லாம்கசப்பே -- அப்
படுபா விகு திப்பே -- நம்
பத்தவச்சல னார்க்கு மட்டும்
அத்தனையும் மிக இனிப்பே!
மக்கள் நிகர் என்று கூட்டில்
வைத்திருந்த தேனைப் -- போய்
நக்குவதா கோயிலிலே
பிச்சைக்காரப் பூனை? -- தமிழ்
நாட்டை ஆள வந்தார் -- புகழ்
ஏட்டை யேன்ம றந்தார்? -- பழி
மூட்டை யேசு மந்தார் -- நம்
முத்தமிழ் மானம் போக்கப்
பத்த வச்சல மா பிறந்தார்?
தக்க தமிழ்த் தாயகந்தான்
தலை குனிய லாமா -- ஏன்
சரிநிகர் எல்லாரும் என்றால்
தருமம் கெட்டுப் போமா?
சாதி என்ற பண்டம் -- நம்
தாய கம்சுரண்டும்! -- அது
தீதுவைத்த குண்டம் -- இத்
தீச் செயலை ஆதரிப்போன்
செல்வம் சேர்க்க அலையும் முண்டம்.
|
( 340 )
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
|
நேருவின் ஆட்சி தீருகின்ற நாள்
நெருங்கிற் றென்று கொட்டடா முரசம்
சாரும் ஆரியர் வாழ வைக்கு மோர்
தன் விருப்பத் தனியாட்சி நோய் கொண்ட
(நேருவின்
ஆட்சி)
இந்தி புகுத்தித் தமிழ் விளக்கவித்தான் தன்
இனத்த வர்க்கே செல்வம் குவித்தான்
செந்தமிழ் நாட்டார் வாழ்வைக் கவிழ்த்தான் -- இன்று
செல்வாக் கெல்லாம் இழந்து தவித்தான்.
(நேருவின்
ஆட்சி)
தமிழகத்தின் பெருவரு மானம் -- எல்லாம்
வடவருக்குத் தான் செய்யும் தானம்!
தமிழ் நாட்டமைச்சர் எவர்க்கும் தன் மானம்
சற்றும் வேண்டாமாம் எள்ளள வேணும்
(நேருவின்
ஆட்சி)
காங்கிரசுக்குத் தான் பெற்ற தங்கை -- தலைவி
காசில் விளையாடுகிறவள் தங்கை!
ஆங்காண் என்றூதினாள் தன் ஆணைச் சங்கைஇதோ
அவனே பூண்கின்றான் அவன்கால் விலங்கை.
(நேருவின்
ஆட்சி)
சமநிலை நோக்கிடும் ஆட்சியின் மூலம் -- தன்
சமையமா? சாதியா? உமிழாதா ஞாலம்?
சுமை தாங்கி சுமையினைத் தனதென்ற காலம்
தொலைந்தது தொலைந்தது நாட்டில் எப்பாலும்
(நேருவின்
ஆட்சி)
|
( 380 )
( 385 )
( 390 )
( 395 )
|
|
|
|