பக்கம் எண் :

வேங்கையே எழுக!

இந்தித் திணிப்புச் சரியல்ல!

அமைதி வேண்டும் நாட்டினிலே
அன்பு வேண்டும் என்பார்
ஆழ மடுவில் நீரைக் கலக்க
வேண்டாம் என்று சொல்வார்.

தமிழகத்தில் இந்தி திணிக்கச்
சட்டம் செய்தார் அவரே
சாரும் குட்டையில் எருமை மாட்டை
தள்ளுகின்றார் அவரே!

சுமக்க வேண்டும் இந்தியினைப்
பொதுமொழியாய் என்பார்;
தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல்
தொலைய வேண்டும் என்பார்;

தமிழ்மொழியை அழிக்க வேண்டும்
என்றவரும் அவரே
தமிழகத்திலே புகுந்த
சாக்குருவிகள் அவரே!





( 5 )





( 10 )





( 15 )
இந்தி ஒழிக

தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான்
தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்;
தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி,
தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை
அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள்
அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன்
கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன்
கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன்.

தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள்
தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள்
தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி
தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை
அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள்
அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன்
உமிழ் இந்தி நான் என்றாள்! ஒழிவாய் என்றேன்
ஒழிப்பவர்கள் ஒழிக்கட்டும் ஒழியேன் என்றாள்.



( 20 )





( 25 )




( 30 )

கீழறுப்பான் வாழுவானா?

பெரியாரின் காலைப் பிடி
மரியாதை யாக நடி
பெரியாரை யேஒழிப்பாய் மறுபடி
பெருநாட்டில் நீதான்ஓர் உருப்படி ஆனால்
பெறப்போகின்றாய் இனிமேல் செருப்படி

மணம்செய்ய நீ கெஞ்சு
மணம் ஆன பின் மிஞ்சு
பிணிபோலும் தலைமைபெற உன்நெஞ்சு -- நம்
பெரியார்க்கே இடநினைக்கு மேநெஞ்சு -- அடடே
பின்விளைவை முன்எண்ணி நீ அஞ்சு.

விடுதலையில் விளை யாடு
கெடுதலையே நீ கேடு
படுகாலிப் பையாநீதான் மண்ணோடு -- மண்ணாள்
பழியோடு மறைந்துபோ கட்டோடு -- இங்குப்
பறக்குமோஉன் புதுக்கொடிதான் பிற்பாடு?

பீபீநூற் றுக்கு நூறு
பிரிந்தொழிந்தான் ஒரு வாறு
பீபீநூற் றுக்கைம்பதே முன்னேறு -- இங்குப்
பின்னும்எதற்கடா விளக்குமாறு?
பெரியார்க்கா சாத்த வந்தாய் வெண்ணீறு?


( 35 )





( 40 )





( 45 )





( 50 )

அவர் செல்லும் பாதை


முன்னே போகும் குதிரை -- அதைத்
தன்ன தென்றார் நேரு!
முன்னை நாகரீகம் -- அறம்
முற்றிய பண்பாடு
நன்ற மைந்த நாடு -- நம்
நல்ல தமிழ் நாடு
தொன்மையான நாட்டை -- மிகச்
சுரண்ட வந்தார் நேரு.

சீக்கி யரின் நாடும் -- மற்றும்
சின்ன பல நாடும்
தூக்க முயற்ற போது -- முடி
சூடிக் கொண்ட நேரு!
பார்க்க நேர்ந்த போது -- ஓடிப்
பறந்திடுவார் நேரு!
ஏய்க்க வந்தார் நேரு! -- இந்தி
எவர்க்கும் வேண்டு மென்றே.

தில்லி யிலே குந்தி -- நேரு
செப்பு மொழி எல்லாம்,
நல்ல சட்ட மென்றார் -- அது
நமக்கு மென்று சொன்னார்.
எல்லை யற்ற நாளாய் -- இங்
கிருந்த தமி ழாட்சி
இல்லை என்று சொன்னார் -- அதை
யாவர் ஒப்பு வார்கள்?

படை யுடையார் நேரு -- அந்தப்
பதவி நிலை யாமோ!
குடம் உடைந்து போனால் -- அதன்
குற்றோ டெல்லாம் மண்ணே!
கமை விலைபோ காதே -- அது
கட்டித் தங்க மாமே
இடை நடுவில் நேரு -- அறம்
ஏற்று நடப் பாரா?


( 55 )




( 60 )





( 65 )




( 70 )




( 75 )





( 80 )



போர் தொடங்கு!

கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு!
காம ராசனே போரைத் தொடங்கு!
முழுது தமிழகம் உனை ஆதரிக்கும்
முத்தமிழ்க் கொடியினை வானில் விரிக்கும்!
(கழுகான தில்லியின்)

அழுதவர் உன்மக்கள் அரிசிக்குத் துடித்தார்
அன்பிலா வடக்கர் பழம்பாடம் படித்தார்
பழகினை பல்லாண்டு தில்லி யோடு
பழிகாரரால் வாழுமா தமிழ்நாடு!
(கழுகான தில்லியின்)


ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்;
ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம்
காட்டி வந்துள மனப்பான்மை யாவும்
கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும்.
(கழுகான தில்லியின்)

நீட்டத் தமிழர் துடிக்கும் துடிப்பை
நீக்குநீ நீக்குநீ வடவர் பிடிப்பை,
ஆட்பட்டோரின் அனமச்சராய் இராதே
ஆளும் தமிழரின் அரசென வாழ்கநீ!
(கழுகான தில்லியின்)

( 85 )






( 90 )






( 95 )







( 100 )
வருக போரே!

முந்நூ றாண்டின் பின்னே -- யாம்
முதலிற் காணும் போரே
தின்பாய் நல்ல கொலைகள் -- அந்தச்
சீனாக் காரர் தலைகள்.

இந்நாட் டாரின் வீரம் -- பார்
என்று காட்டும் போரே
செந்நாய் இதைக் கருதிக் -- குடிக்கும்
சீனாக்காரன் குருதி.

போருக்குத்தான் தோளை -- அவன்
பழைய வீர வாளை
பாருக் கெல்லாம் காட்டப் பண்
பாடி வந்த போரே!

ஊராசையால் வந்தான் -- அவன்
உண்மையை மறந்தான்
சீரழிந்தான் கள்ளன் -- அந்தச்
சீனாக்காரக் குள்ளன்.

இமயத்துக்கே வெற்றி -- யாம்
குமரிக்கு நல் வெற்றி!
கமழும் காவேரிக்கும் -- நற்
கங்கைக்குமே வெற்றி!

சுமை சுமையாய் வெற்றி -- யாம்
கமக்க எண்ணி வந்தாய்,
அமைதி காக்கும் போரே -- நல்
அறத்துக்குத்தான் வெற்றி!






( 105 )





( 110 )





( 115 )




( 120 )




சூயென்லாய் சீனரின் நோய்

சீன மக்களுக்கேற்பட்ட ஒரு நோய் சூயென் லாய்
சீர்பட்டு வருகின்றாள் உலகத்தாய் குரைத்தது நாய்!
பூனைக்குட்டி வரிப்புலியின் வாய் புகுந்தது போய் -- எம்
பொன்னாட்டுத் திறம் எண்ணாத ஒரு சேய் சூயென் லாய்!
மலையில் முட்டத் தலைமை பெற்றானா வெல்வானா!
வாழ்விற்கலை வாழ்வு பெற்றது சீனா வாழவைப்பானா?
வலைவீசிப் பிடிக்க வந்தானா நாங்கள் மீனா?
மண்ணாய்ப் போகும் நாளிது தானா செஞ் சீனா
புறமுதுகு காட்டாத நாடு -- பாரத நாடு
பூவுலகில் முதலில் வாளேடு பிறந்த நாடு!
அறங்காக்க வாழ்ந்திடு நாடு பொன்னாடு -- நல்
அறிவில்லாத சீனனை உயிரோடு புதைக்கும் நாடு!

( 125 )




( 130 )




( 135 )
வலை விரித்தான் ஆச்சாரி

            போகாதே சாகாதே

வலைவிரித்தான் பார்ப்பானடா
மக்களெலாம் வருகஎன்பான்
கலையழித்தான் கண்ணிவைத்தான் போகாதே -- நாம்
கண்டபயன் போதுமினிச் சாகாதே!
நலிவுசெய்வான் பார்ப்பானடா
நாலுசாதி வாழ்க என்பான்
புலியடிப்பான் கறிக்காகப் போகாதே -- நீ
போனமட்டும் போதும் இனிச் சாகாதே!
பள்ளிஇரு பத்தாயிரம்
படிப்பவர்கள் படிக்காமல்
கொள்ளிவைத்தான் ஆச்சாரிதான் போகாதே -- அக்
கெள்ளைநோய்க்கு மருந்துமில்லை சாகாதே!
மதிதமிழர் ஒழியவேண்டும்
மடப்பார்ப்பான் வாழவேண்டும்
இதுதான்ஆச் சாரிஎண்ணம் போகாதே -- நீ
இதுவரைக்கும் பார்த்துவிட்டாய் சாகாதே!
பன்னாடைக் கட்சிகளும்
பழிவாங்கும் சின்னவரும்
என்கூட்டம் என்றுரைப்பான் போகாதே -- அவ்
வெறிமூட்டும் கூட்டத்தினாற் சாகாதே!






( 140 )




( 145 )




( 150 )




( 155 )

இந்திப் போர் மூளுக

இந்திக்குச் சிறை சென்ற ஆதித்தானார் வாழ்க!


இந்தியை எதிர்க்கும் மாணவர் வெல்க

இந்திஎன்று சாக்குருவிக் கூச்ச லிட்டார்
இராசேந்தி ரப்பிரசாத்! அவரே இந்த

செந்தமிழ்நாட் டிற்காலை வைத்தார் என்றால்
திருவடிக்குப் பூசைசெய்வார் தமிழர் ஆகார்!
எந்தமிழ்மேல் இந்தியினை ஏற்ற எண்ணும்
இடக்கரே வடக்கரே செல்வீர் என்றே
எந்தமகன் எதிர்த்தானோ அவனே நாட்டின்
எழில்மறவன்! தன்மானச் சிங்கம் என்பேன்.

துடைநடுங்கித் திராவிடமுன் னேற்றக் கண்ணீர்த்
துணிகளெல்லாம் கருங்கொடிகாட்டு வதாய்ச் சொன்னார்
படையுண்டு; வலியுண்டு மிகவே என்றார்
பதுங்கியது தவிர ஒன்றும் புரிந்த தில்லை?
உடலெல்லாம் பொருளெல்லாம் ஆவி எல்லாம்
உயர்தமிழுக் கேஎனுமா தித்த னார்தாம்
தடைசெய்வேன் கருங்கொடியால் என்றெழுந்தார்
தமிழ்கொல்லும், ஆளவந்தார் சிறையிற் போட்டார்.

நாம் தமிழர் இயக்கத்தார் நாமும் என்றார்
நாடாள்வார் அவரையும்தாம் சிறையிற் போட்டார்
நாம் தமிழர் இயக்கத்தார் நடுங்க வில்லை
நம் தமிழர்க்குச் சிறைஎன்றால் கற்கண் டென்றார்
மோந்துமோந் தயலடியை நக்கும் நாய்கள்
முகம்நாணி வீட்டுக்குள் புகுந்து கொண்டார்
வேந்தான பிரசாதை வெறுத்து ரைத்த
சிவஞான மேலோனும் வாழ்க நன்றே.

ஆதித் தனார்வாழ்க அவரி யக்கம்
நாம்தமிழர் அதுநாளும் வாழ்க! வாழ்க!
தீதுற்ற பிரசாத்தின் நெஞ்சு கண்டு
சீறுகின்ற தமிழகத்து மாணவர்கள்
சூதுற்ற ஆளவந்தார்க் கஞ்ச வேண்டாம்
தொடைநடுங்கி கள்பேச்சைக் கேட்க வேண்டாம்
ஓதுற்ற அன்னையாம் தமிழைக் காக்க
உறுதிக் கொள்க! போர் வெல்க! வெல்க நன்றே!





( 160 )




( 165 )




( 170 )





( 175 )




( 180 )





( 185 )


புதுவாழ்வு வேண்டும்

வாளைத் தூக்கித் வேலைத் தூக்கி
       வந்து புகுந்த இந்தி -- நம்
வாழ்வைத் தூக்கி அடிக்குமடா
       தமிழகத்தில் குந்தி!
தேளைத் தூக்கி மேற்போட்டான்
       நாட்டிலேபொ ருந்தி -- நீ
செருப்பைத் தூக்கிப் போடவன்மேல்
       உன் மனம்திருந்தி.

ஆளைத்தூக்கி ஆள்மேலே
       போட்டான் வட மந்தி -- கீழ்
அறுப்பாரை அகற்றிவிட்டால்
       கிழியும் அவன் தொந்தி!

தோளைத்தூக்கி உலகாண்டான்
       செந்தமிழன் முந்தி -- தன்
தோலைத்தூக்க எலும்பில்லாமல்
       துடிக்கலுற்றான் பிந்தி.

உலகுதோன்ற உடன்தோன்றி
       நிலவும்தமிழ் நாடு -- தன்
உருத்தோன்ற முடியாமல்
       சூழ்ந்துவிட்டார் கேடு!

சிலநாள்கள் இந்தநிலை
       தீர்ந்திடும்பிற் பாடு -- நீ
செந்தமிழை என்னருமைத்
       தாயென்று பாடு!

பலருள்ளார் தமிழ்மறவர்
       தமிழாஉன் னோடு!
பழநாளின் ஆட்சியிலே
       விளக்கடா உன்பீடு!

புலைஎழுப்பும் இந்திநாயின்
       தலையில் ஒன்று போடு -- நம்
புதுவாழ்வைப் பழநாட்டில்
       விடுதலையால் தேடு!


( 190 )




( 195 )




( 200 )






( 205 )





( 210 )





( 215 )





( 220 )

படித்தவன் அழுகை

உலகு தொடங்க உடன்தொடங் கியதாம்
       இலகு தமிழர் வாழ்வுதான் இந்நாள்
ஆற்றல் இருந்தும் அறிவி ருந்தும்
       வேற்றுமைப் பெரும்புயற் காற்றிற் சிக்கிய
சருகென வாழ்வு சரிந்து கிடக்கும்
       பழுதினைச் சுவடியிற் படித்தவன்
அழுத கண்ணீர் அருவியிற் பெரிதே





( 225 )

வெல்வதுறுதி

குள்ள நரியாய்ப் பதுங்கி ஆச்சாரி
   கொடுக்கும் குலக்கல்வித் திட்டம்
கள்ளப் பசப்புமொழியாகும் -- சுடு
   காட்டை எண்ணுவரோ தமிழர்?
எத்தனின் ஏமாற்றுத் திட்டம் -- நமை
   ஈடேறா தழிக்கின்ற திட்டம்;
செத்ததுவா தமிழ்க்ருதி -- தமிழா
   சீறுக வெல்வதுறுதி!
காமராசரே இதைப் பொறுக்கோம் -- குலக்
   கல்வியின் வேரை அறுப்போம்!
ஓமந்தூரர்தம் இடத்தில் -- நீ
   உட்கார வேண்டும் திடத்தில்!
கோணற் கருத்துகள் போகும் -- வந்த
   குறுக்குநூல் பாழ்எண்ணம் சாகும்!
ஆணவ ஆச்சாரி வீழ்க! -- தமிழ்
   அண்ணலே நின் ஆட்சி வாழ்க!



( 230 )




( 235 )




( 240 )


விடுதலை நம் உரிமை

கையோடு கைகோத்து வாரீர்
கழகத்தோழர்களே ஒன்று சேரீர்
பொய்யோடு வந்தவர்
புரட்டோடு வந்தவர்
புறங்காட்டி ஓடினர் பாரீர்!

எந்தக் கொடுமைகள் வீழ்த்தும்?
எந்தத் தடைச்சட்டம் தாழ்த்தும்?
உந்தும் விடுதலை
வேட்கை உரிமைகள்
ஒற்றுமை கண்டே வாழ்த்தும்.

விடுதலை வாழ்வுநம் உரிமை
வேங்கைபோல் நீஎழு! அடிமை
கெடுதலை தூள் படும்
கீழ்மைகள் மாண்டிடும்
கீழ்அறுப்பதெந்த எருமை?

முன்னோர்கள் ஆண்ட இந்நாடு
முச்சங்க முத்தமிழ் ஏடு
பின்னாளில் வந்தேறிக்
கூட்டம் சுரண்டினும்
பிழைத்தது, இனியில்லை கேடு!

தீங்கரசுக் கென்ன ஆட்சி
திராவிடர் கைகொள்ளும் மாட்சி
ஓங்கிடும் ஐந்தாண்டில்
உண்மை மொழியிது
பெரியார் உழைப்புக்கில்லை வீழ்ச்சி!

உழைப்பால் வருவது வெற்றி
உரிமை விடுதலைப்பற்றி
அழைத்தது சங்கொலி
ஆர்த்தது முரசொலி
ஆட்சி அதிகாரம் முற்றி!

கண்ணில் கல்வி விளக்கேற்று,
கைத்தொழில் வாழ்வுக்கு நாற்று
மண்ணில் பொது நலம்
மாண்புடி தமிழரால்
மண்டிற்று என்றசொல் ஊற்று!


( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )





( 270 )





( 275 )



எங்கள் நாடு தனிநாடு

எங்கள் மொழி தனிமொழி

கொதிப்புள்ள வீரர்களே
கொள்கைமிகு தோழர்களே
மிதித்திடும் வஞ்சகரை வீழ்த்துவீர்!
'மேல்வருண' நஞ்சினரைத் தாழ்த்துவீர்!
மதிதமிழ் தன்மான
மறவரை நாடொறும் நீ வாழ்த்துவீர்!

பாடுபடும் பாட்டாளி
பணம் சுரண்டும் பொருளாளி
நாடுகெடும் இரண்டினத்தை மாற்றுவீர்!
நல்லுழைப் பாளர்களைப் போற்றுவீர்!
கேடுகெட்ட கொள்கையினர்
கீழ் அறிவு திருந்த அறிவூட்டுவீர்!

செந்தமிழை எண்ணாமல்
சேர்மொழிக்குப் பாய்விரிக்கும்
வந்தேறிகள் கங்காணிகள் ஓட்டுவீர்!
வரிப்புலிகள் நாங்களென்று காட்டுவீர்!
இந்தியாட்சி கொள்ளாதென்றே
எங்கள்நாடு தனி நாடென்றே நாட்டுவீர்!


( 280 )





( 285 )




( 290 )





( 295 )

எரிமலைச் சீற்றம்

கடுஞ்சினம் மாந்தரைக் கண்குரு டாக்கும்
கண்ணோட்டம் அன்பினை நட்பினைத் தீர்க்கும்
கொடுவிலங் காக்கிடும் சுற்றம் பார்க்காது
கொண்ட கொள்கைகளைக் காத்திடும்போது!

    படுகளம் படுகளம் இனிக்கும்கற் கண்டு
    பைந்தமிழ் காப்பாய் நீ போர்க்குணம் கொண்டு!

இந்திக்குக் காட்டுக கொதிப்பை வெறுப்பை!
என்நாட்டார் உணரட்டும் தமக்குள்ள பொறுப்பை!
வந்தவர்க்கெல்லாம் நாம் இடம் தரமாட்டோம்
வலியவரும் போரில் புறங்காட்ட மாட்டோம்!

    முந்துக முந்துக போர் எல்லைக் கோடு
    முழுவெற்றி நமக்கென்று முழக்கிற்றன் போடு!

ஆட்பட்டிருப்பவர் நாமல்லர் கூறு
ஆளவந்தோம் தமிழ் ஆட்சியின் வீறு
நாட்கடத் தாது நம்கையில் உண்டு
நலிவுசெய் வார்களின் தலைக்குவை குண்டு!

    மீட்பதென்றே எழும் எரிமலைச் சீற்றம்
    வெற்றியின் வார்ப்பட வெற்றியின் தோற்றம்!




( 300 )






( 305 )






( 310 )




வேங்கையே எழுக!

வேங்கையே நீ எழுக!
வெற்றித் தமிழைத் தொழுக!

    ஓங்கியெழும் எரிமலைபோல்
    உதவா மொழிமேல் விழுக!

இந்தியாமே இந்தி
இனவெறிகொள் இந்தி

    வந்ததென்றார் வாள்எடு நீ
    வாலறுக்க முந்தி!

ஆங்கிலத்தால் நாடு
அழிந்தது பண்பாடு

    தூங்கவில்லை தமிழர்என்று
    தோலை உரித்துப் போடு!

ஒருமைப்பாடு வேண்டி
உளறினான் ஓர் ஆண்டி

    அருமைப்பாடு தெரியாதார்க்கு
    அறிவு கொளுத்துத் தூண்டி!

தாய்மொழிதான் கண்கள்
தழுவும் மொழிகள் புண்கள்

    நோய்மொழியை நுழைத்தால் சாவு
    நூறாயிரம் எண்கள்!

இந்தியா ஒரு நாடு
என்பதே தப்பேடு

    செந்தமிழர் நாடு வேறென்பதைச்
    சீறிப் பெறுக பீடு!

( 315 )






( 320 )






( 325 )






( 330 )







( 335 )