பூவிரிந்து வானெங்கும் தேன்வி ரிந்து
பொன்விரிந்தாற் போலுநறும் பொடிவி ரிந்த
காவிரிதல் போலெங்கும் விரித லாலே
காவிரிஆ றென்றார்கள்; அதன்தொ டர்பால்
காவிரிப்பூம் பட்டினம்என் றேமுன் நாளில்
கவிவிரியும் நாவினோர் நகரைச் சொன்னார்;
மூவிரிநூற் றமிழ்வேந்தர் மூவருள்ளும்
முந்துபுகழ் மாவளவன் அதற்கு மன்னன்
காளைக்கு நாளெண்ணிக் காத்தி ருக்கும்
காதலிபோல், இனிப்பான பதநீர்த் தென்னம்
பாளைக்குக் காத்திருக்கும் ஊரார் போல்,அப்
பட்டினத்து வாழ்கின்ற மக்கள் யாரும்
வேளைக்கு வேளைஇதோ வந்த தென்று
விளம்புமொரு காவிரிவி ழாநெ ருங்க
நாளைக்கே என்றுமகிழ் கொண்டார், காலை
நடுப்பகல்; இராப்போது நகர்ந்த பின்னே,
பழாமரத்திற் பழுத்தஒரு மாம்ப ழம்போல்
பாசிபடர் குளத்தி லொரு தாம ரைபோல்
முழாக்கண்ணில் கையுற்ற வௌவடுப்போல்
மொய்த்தகருங் குழற்கிடையில் மகள்முகம்போல்
எழாஉளத்தும் மகிழ்ச்சிஎழ இருளின் நாப்பண்
எழுந்தஇள ஞாயிற்றின் ஒளியில் யாண்டும்
விழாப்பெருநாள்; காவிரிநற் றிருநாள் என்று
வேந்துமுரசானையின்மேல் அறைந்தான் வீரன்
|
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
|