பக்கம் எண் :

இசையமுது
(இரண்டாம் பகுதி)

பெண்கள்

அன்னையின் ஆவல்

நகாலுக்குப் புன்னையிலை போலும்          செருப்பணிந்து
கையில் விரித்தகுடை                    தூக்கி-நல்ல
கல்லிக் கழகமதை                   நோக்கிக்-காய்ச்சும்
பாலுக்கு நிகர்மொழிப் பாவைநீ             செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி              பாக்கி

மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற்         றாடைகட்டி
வீட்டினின்றும் ஆட்டமயில்                போலே-கைம்
மேற்சுவடி யோடுதெரு           மேலே-கூர்
வேலுக்கு நிகர்விழி மெல்லிநீசெல் வதைக்காண
வேண்டும் இப்பெற்றவள் கண்ணாலே

ஓவியம்கற் றாள்உன்மகள் காவியம்கற்       றாளெனவே
ஊரார் உன் றனைமெச்சும்             போது-கண்ணே
உவகைதான் தாங்குமோஎன்             காது-நீஓர்
பாஎழுதும் திறத்தால் ஊர் அமைதி        கொண்டதென்று
பாரோர் புகழ்வ தெந்நாள் ஓது?

மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே நீ
மங்கை எனும்பருவம்                கொண்டு-காதல்
வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக்         கண்டு-காட்டித்
'தேவை இவன்' எனவே செப்பும்        மொழி எனக்குத்
தேன்! கனி! தித்திக்குங்கற்              கண்டு.

பூவும் நறுமணமும் ஆவியும் உடலும் போல்
பொன்னேஉன் அன்பனோடு              சேர்ந்து-சிறு
புன்மையும் இல்லாமல் அறம்             சார்ந்து-பூங்
காலில் உலவுவது காணக் கிடைத்திடுமோ
கண்ணே சொல்லடி அன்பு கூர்ந்து

சேவல்என நிமிர்ந்து சிறுத்தையெனப்   பகையைச்
சீறும் குழந்தைகளைப்        பெற்றே-நீ
செல்வம் பலவும் மிக          உற்றே-நல்ல
காவல் இருந்துவளந் தாவும் திராவிடத்தைக்
காப்பது காண வேண்டும் சற்றே





( 5 )





( 10 )





( 15 )





( 20 )





( 25 )





( 30 )
ஆண் குழந்தை தாலாட்டு
ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ
சீராரும் இன்பத் திராவிடனே எம்கரும்பே
ஆரா அமுதேஎன் அன்பேநீ கண்வளராய்.

ஆரியர்கள் இங்கே அடிவைக்கு முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றிச் திராவிடரின்
பேரர்க்கும் பேரனே பிள்ளாய்நீ கண்உறங்கு!
சேர அரிதான செல்வமே கண்ணுறங்கு!

வெண்டா மரையில் விளையாடும் வண்டுபோல்
கண்தான் பெயரநீ என்ன கருதுகின்றாய்?
பண்டைத் திராவிடத்தின் பண்பு குறைக்க இனி
அண்டைப் பகைவர் நினைப்பரெனும் ஐயமோ

தொண்டு விரும்போம் துடை நடுங்கோம் எந்நாளும்
சண்டையிட்டுத் தோற்றதில்லை தக்க திராவிடர்கள்
எண்டிசையும் நன்றறியும் அன்றோ இனிக்குங்கற்
கண்டே கனியே என் கண்மணியே கண்வளராய்!

தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள்
எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே
திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின் மேல்
மங்கா உடல் மலரும் வாய் மலரும் கண் மலரும்

செங்கை மலரும் சிரிப்பின் எழில் மலரும்
தங்கா தசைந்தாடும் தண்இரு கால் மலரும்
அங்கங் கழகுசெய்யும் ஆணழகே கண் மலரும்
எங்கள் மரபின் எழில் விளக்கே கண் வளராய்!







( 35 )





( 40 )





( 45 )





( 50 )
பூத்தொடுத்தல்
தலைவி :
விருந்து வரக் கண்ட
மெல்லிய முகம்போல், முல்லை
அரும்பு மலர்ந்தது என்ன             வேடிக்கை
( 55 )
தோழி :

தெரிந்தவரைக் கண்டாலும்
தெரியாதாரைக் கண்டாலும்
சிரிப்பதுதான் இதன்                வேடிக்கை


( 60 )
தலைவி :
தங்கத்தில் அச்சிட்டுச்
சரிபார்த்து மெருகிட்டு
மங்கா இயற்கை தந்த              சாமந்தி

தோழி :
இங்கே இதுஉந்தான்
மஞ்சளுக்கு அவளப்பன்
சரக் கொன்றை பார்இ             தைமுந்தி

( 65 )

தலைவி :

அரளி மாணிக்கம் போன்ற
அலரி மருக் கொழுந்தும்
அடுக்கடுக்காய் வைத்துத்          தொடுப்போம்

தோழி :

ஒரு விரற் கடை பச்சை
ஒரு விரற் கடை வெள்ளை
இப்படியே தொடுத்து            முடிப்போம்

( 70 )
                    புறாவே

தன்போல் மற்றொன்றைத் தான்உண் டாக்குதல்
மன்னுயிர்க் கெல்லாம் இயல்போ புறாவே?
இன்பம், குழந்தையைப் பெறுவது தானோ?
வளர்ப்பதும் இன்பமோ மாடப் புறாவே?

உயிரில் கலந்த உணவையும் கக்கியே
ஊட்டிடு கின்றதும் இன்பமோ புறாவே?
மயல்தீர் வாழ்வில் இன்பத்தின் அடிப்படை
மக்களைப் பெறுவதோ மாடப்புறாவே?

மக்களின் மலருடல் தொடுவதும் இன்பமோ?
மழலை மொழியும், குழலோ புறாவே?
மக்களில் லாதார் வாழ்க்கை விழலோ
மனநலம் வாய்ந்த மாடப்புறாவே?



( 75 )






( 80 )
பந்தாடல்

தலைவி :

அடித்த பந்தினை மறுத்துப் பிடிக்க
ஆகாதடி    மாதே
ஆகாதடி

( 85 )
தோழி :

பிடித்துப் பந்தினை திருப்பினேன் அடி
நீ பாரடி    மாதே
நீ பாரடி



( 90 )
தலைவி :

அங்குவந்த பந்துன் திங்கள் முகத்தொடு
போராடுதே மானே
போராடுதே

தோழி ;

மங்கை என் பந்துப றந்துன் மார்புக்கு
நேராகவே மானே
நேராகவே


( 95 )
தலைவி :

தாக்கிடும் என்பந்து பார்த்துத் தடுத்துக்கொள்
நேராகவே       தோழி
நேராகவே

தோழி :

தூக்கி அடித்தேனே பூப்பந்து பாரடி
தோள் மீதிலே     தோழி
தோள் மீதிலே
( 100 )