பக்கம் எண் :

10கவிமணியின் கவிதைகள்

Untitled Document
5. முருகன் புகழ்மாலை

28.   புல்லும் பசுவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்;
கல்லும் திருக்கோயில்கட்டுதற்காம் - தொல்லுலகில்
ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர்
வாழும் வடிவேல வா!

29.   முத்தையா! வேலா! முருகா! எனவோதும்
சொத்தையே தேடிச் சுகமடைவீர் - நித்தமிவ்
வீடும் களமும் விளை நிலமும் தோப்புகளும்
மாடும் சதமாகு மா?

30.   பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்க்கநமக்கு
உற்ற துணையாய் உதவுகவே! - வெற்றிதரும்
ஈராறு கையன் இமையோர் சிறைமீட்ட
வீராதி வீருன்செவ் வேல்.

31.   செந்தில் முருகா! திருமால் மருகா! என்
சிந்தை குடிகொண்ட தேசிகா!- வந்தினிய
பைந்தமிழ்ச் சோலையிலே பாடும் கவிக்குயில்கள்
சந்ததம் வாழவரம் தா.

6.கூட்டிச்செல்லையா

32.   நாட்டு வைத்தியனும்
     நாளைக் கடத்துகிறான்
வீட்டி லுள்ளோரும் விசனப் படுகின்றார்
     காட்டு மயில் மீது
ககனம் சுற்றியவா
     கூட்டிச் செல்லையா
கூவிட வலிமையில்லை

7. குமரிப் பகவதி

33. தென்னெல்லை காத்தாளும் தேவி! குமரீ! நின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் - மன்னு புகழ்ச்
செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர்நா டொத்து, உலகில்
சந்ததம் வாழவரம் தா.