பக்கம் எண் :

110கவிமணியின் கவிதைகள்

Untitled Document
695 தாகித்து வந்தவ ருக்குச்-செம்பில்
     தண்ணீர் அளித்திடச் சம்மதி யாது;
சோகித்து வீழ்வோரைக் கண்டால்-தலை
     தூக்கி வியர்வை துடைக்க ஒட்டாது.

696 கண்ணுதல் ஆலயம் சென்றால்-அங்கே
     கையிற் பிரசாதம் போட வொட்டாது;
எண்ணி வரையளந் திட்டே-அதற்கு
     இப்புறம் அப்புறம் நில்லென்றதட்டும்.

697 கப்பலில் ஏறிட அஞ்சும்-சில
     காப்பிக் கடைஎட்டிப் பார்க்கவும் நாணும்;
செப்பும் புகைவண்டி யுள்ளே-அது
     சீற்றம் அடங்கி ஒடுங்கி கிடக்கும்.

698 கண்ணான காந்தி மகானும்-இதைக்
     கண்டு நடுங்கிக் கடவுளை வேண்டி,
உண்ணா திருந்தனர் என்றால்-இதன்
     ஊக்கம் சிறிதும் உரைத்திடப் போமோ!

699 முன்னம் பெரியோர் இதனை-வெட்டி
     மூடிப் புதைத்தும், உயிர்வலி கொண்டு
பின்னும் முளைத்ததே, ஐயா!-இது
     பேய்களும் அஞ்சும் பெரிய பேய், ஐயா!

700 பொல்லாத பேயிதை நம்பி-இன்னும்
     பொங்கலிட் டாடுதல் புத்தியோ? ஐயா
நல்லாக வேண்டுமே யானால்-இதை
     நாட்டைவிட் டோட்டித் துரத்துவோம், ஐயா!

701 இப்பெரும் பேய்இனி மேலும்-நமது
     இந்திய நாட்டில் இருந்திட லாமோ?
கப்பலில் ஏற்றுவோம், ஐயா!-நடுக்
     காயல் கடல்கண்டு தள்ளுவோம், ஐயா!

90. மதுவிலக்குப் பாடல்கள்
702 வள்ளலெங்கள் காந்திமகான் வாக்குப் பலித்ததடா!
     துள்ளுமுன் பேயாட்டம் தொலைந்ததடா!-கள்ளரக்கா!
வஞ்சிவள நாட்டிலுன் வாழ்வற்றுப் போச்சுதடா!
     நெஞ்சிலுணர்ந் தோடடா! நீ.