பக்கம் எண் :

118கவிமணியின் கவிதைகள்

Untitled Document
752 மங்கைய ராகப் பிறந்ததனால் - மனம்
     வாடித் தளர்ந்து வருந்துவதேன்?
தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்
     தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?

753 செம்மையிற் பெற்ற குணங்களெலாம் - நீங்கள்
     செய்வினை யாலே திருத்துவீரேல்,
இம்மைக் கடன்கள் முடித்திடவே - முத்தி
     எய்திச் சுகமா யிருப்பீரே.

97. உடல் நலம் பேணல்
754 உடலின் உறுதி உடையவரே
     உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
     இனிய வாழ்வு தந்திடுமோ?

755 சுத்தமுள்ள இடமெங்கும்
     சுகமும் உண்டு? நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
     நீண்ட ஆயுள் பெறுவாயே.

756 காலை மாலை உலாவிநிதம்
     காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
     காலன் ஓடிப்போவானே!

757 ஆளும் அரசன் ஆனாலும்
     ஆகும் வேலை செய்வானேல்,
நாளளும் நாளும் பண்டிதர்கை
     நாடி பார்க்க வேண்டாமே.

758 கூழையேநீ குடித்தாலும்,
     குளித்த பிறகு குடி, அப்பா!
ஏழை யேநீ ஆனாலும்
    இரவில் நன்றாய் உறங்கப்பா!

759 மட்டுக் குணவை உண்ணாமல்
     வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப்பட்டிடுவாய்;
     தினமும் பாயில் விழுந்திடுவாய்.