பக்கம் எண் :

144கவிமணியின் கவிதைகள்

Untitled Document
933 எவ்வுளமுங் குளிரஒளிர் இளமதியே! வருக!
     எங்கும் நிறை புகழ்மணக்கும் எழில்மரலே! வருக!
செவ்வியுறும் அரசர்குலந் திகழ்மணியே! வருக!
     ஜ்யார்ஜீமகா ராஜனருள் திருமகனே! வருக!

934 பொருளேந்தி இனியதமிழ்ப் புதுமாலை ஏந்திப்
     புவிராசர் தொழுவர்; உனைக் கவிராசர் புகழ்வர்;
அருளேந்தி எமையாளும் அரசர்குலக் கொழுந்தே!
     ஆதரித்தெம் திருநாட்டின் அணிகாண வருக!

935 மந்தாரம் முல்லையிரு வாட்சிகுட மல்லி
     மணங்கொண்ட பூவுலக மாதரசி ரோஜா
வந்தானோ வந்தானோ என்றுமுக மலர்ந்து
     வள்ளலுனை எதிர்கொண்டு வளங்காட்டும் ஐயா!

936 கமுகோடு தெங்குபனை காணிக்கை கொண்டுன்
     கழல்போற்றக் கடற்கரையில் காத்துநிற்கும், அரசே!
இமையாத கண்மலர்கொண் டெழுந்துபல தருக்கள்
     எக்கணமும் நின்வரவை எதிர்பார்க்கும், அரசே!

937 ஐய, உன்றன் வரவையெண்ணி ஆவினங்கள் உழைத்தே
     ஆயிரக்கால் மண்டபங்கள் அமைத்துவைத்த பலவே;
செய்யதிரு வடிவணங்கதத் தென்குமரி நங்கை
     சேர்த்து வைக்கும் முத்தினங்கள் செப்ப எளிதலவே.

வேறு
938 வானோங்கி வளர் இமய மலைகாண லாமே!
     வற்றாத கங்கைநதி வளங்காண லாமே!
கானோங்கு மரச்சோலைக் கவின்காண லாமே!
     கமலமணித் தடம்நோக்கிக் கண்களிக்க லாமே!

939 சிறையன்னம் உண்டு; பசுங்கிளி உண்டு; பிரமன்
     சித்திரக்கை நலம்விளக்கித் திரியுமயில் உண்டு.
நிறைநீரில் நீந்துபல நிறமீன்கள் உண்டு;
     நீரில்இரை தேர்குருகு நிரைஉண்டு மிகவே.