பக்கம் எண் :

156கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பயன்

1007 அன்பால் எவரையும் தன்பா லாக்கும்
ஆவடு துறைவாழ் அம்பல வாண
தேசிகா! சிவனருட் செல்வா! இன்றுன்
பொன்னடி தொழுது போற்றிய புண்ணியம்
ஐயமின்றி அருந்துணை யாகிப்
பொய்யை அறவே போக்கி,
மெய்யை உணர்த்தி, மேல் வீடும் தருமே.

வாழ்த்து

1008 சைவம் வளரத் தமிழ்வளரத்
     தருமம் ஓங்கித் தழைத்துவரப்
பொய்யைப் போக்கி மெய்கண்ட
     புனித ஞானி யாமெங்கள்
ஐயன், துறைசைக் குருநாதன்
     அடியார்க் கருள்அம் பலவாணன்
வையம் புகழ நீடூழி
     வாழ்க! வாழ்க! வாழ்கவே!

130. நாமக்கல் கவிஞர்

1009 சிந்தையினால் வாக்கதனால் செய்கை தன்னால்
     தேசத்திற் கோயாது தொண்டு செய்தோன்
முந்தும் அன்பே உருவாக வந்த மூர்த்தி
     மூதறிஞன் காந்திமகான் வழிபின் பற்றிச்
செந்தமிழ்நாட் டாஸ்தான கவிஞ னாகிச்
     சீரோங்கி ராமலிங்க நண் பனே! நீ
சந்ததமும் இவ்வுலகில் வாழச் செந்தில்
     சண்முகனை வேண்டிநிதம் போற்று வேனே.

131. அண்ணாமலை மன்னர்

1010 கோயிலாய் ஓங்கும்; குளமாய்ப் பரந்துநிற்கும்;
நேயமிகு கல்வி நிலையமுமாம் - ஆயபல
புண்ணியங்கள் செய்து புவியில் அறம்வளர்க்கும்
அண்ணா மலைமன் அருள்.