பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு157

Untitled Document
1011 அன்னமிடு சத்திரமாம்; ஆதுலர்கள் சாலையாம்,
மன்னுகலை ஓங்கி வளரிடமாம் - இன்னமுதம்
பண்ணா பசுந்தமிழிறிற் பாவாணர் பாடுபுகழ்
அண்ணா மலைமன் அருள்.

1012 தில்லைப் பதியுடையான் சிற்றம்பலந் தன்னில்
அல்லும் பகலும்நின் றாடுகின்றான் - எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து.

1013 தத்தளித்து நின்ற தமிழிசைச் செல்விக்குப்
புத்துயிரை ஊட்டியநற் புண்ணியவான் - பத்தியுடன்
எண்ணான் கறமும் இனிதா வளர்த்துமகிழ்
அண்ணா மலைமன்ன னாம்.

1014 பூவாரம் தந்திடுவான்; பொன்னாடை போர்த்திடு வான்;
நாவார நல்லுரையும் நல்கிடுவான் - பாவாணர்க்கு
அன்புசெய் திந்நாளில் அண்ணா மலைமன்போல்
இன்படைவார் உண்டோ? இசை.

வேறு

1015 ஐயம் அகல உண்மைகளை
     ஆய்ந்து காணும் அறிவுடையோன்;
செய்யும் வினைகள் ஒவ்வொன்றும்
     திருந்தச் செய்யும் திறம்பெற்றோன்;
கையிற் கொண்ட கருங்கல்லும்
     கனகம் சொரியச் செய்திடுவான்;
வையம் புகழும் தனவணிகர்
     மணியாம் அண்ணா மலைமன்னே.

1016 தில்லைப் பதியிற் பல்கலையும்
     செழித்து வளர இடங்கண்டோன்;
இல்லை யென்னா தெவ்வெவர்க்கும்
     ஈந்து மகிழும் இயல்புடையோன்;
சொல்லை மறவாப் புகழ்வேந்தன்;
     சுற்றம் தழுவும் திருவாளன்;
நல்லன் அண்ணா மலைமன்னன்
     நாட்டுக் கணியாய் வாழுகவே!