பக்கம் எண் :

162கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1035 மண்ணைப் பொன்னாக்கும் மதியூகி! வாய்த்தவினை
எண்ணித் துணியும் இயல்புளாய்! - புண்ணியஞ்சேர்
இந்தியநா டாளும் இராஜகோ பாலா! நீ
சந்ததமும் வாழ்க தழைத்து.

1036 தந்திரிக்குத் தந்திரியாய், தாசனுக்குத் தாசனாய்,
மந்திரிகள் மெச்சுமதி மந்திரியாய் - வந்துதித்த
இன்னருட் செல்வா! இராஜகோ பாலாநீ
மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து.

136. புதுக்கோட்டையரசர்

1037 மண்ணுலக மாமடந்தை வாடாது வாழ்வுபெறத்
தண்ணிழல் தந்துநிதம் தாங்குகவே - எண்ணரிய
பூபாலர் போற்றும் புதுவைத் திருராஜ
கோபாலன் கொற்றக் குடை.

137. சம்பந்த முதலியார்

1038 அந்திமதி சூடிநின் றம்பலத்தி லாடிநிதம்
சிந்தைமகிழ் கூத்தன் திருவருளால் - செந்தமிழ்
நாடுபுகழ் சம்பந்தன் நடிக மகராசன்
நீடுலகில் வாழ்க நிலைத்து.

வேறு

1039 ஈடி லாத செந்தமிழில்
இனிய தமிழில் அழகழகாய்
நாட கங்கள் பலதந்த
நடிக ராஜன் சம்பந்தன்
நீடிவ் வுலகில் பல்லாண்டு
நிலைத்து வாழ நல்லவரம்
ஆடும் கூத்தன் எம்பெருமான்
அருள்க அருள்க அருள்கவே!